இறைவனுடைய கலிமா

யோவான் 1:15-16 


15 யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான். 16 அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.

 

நபி யஹ்யா பலத்த சத்தத்தோடு, எனக்குப் பின் வந்த மஸீஹ் எனக்கு முன்னிருந்தவர் என்று எல்லா மனித வம்ச வரலாறுகளையும் மிஞ்சத்தக்க வகையில் அறிவித்தார். இவ்வாறு அறிவித்ததன் மூலம் மஸீஹ்வின் நித்தியத்தை அவர் வலியுறுத்தினார். அவர் இடத்திற்கும் காலத்திற்கும் அழிவிற்கும் அப்பாற்பட்ட அழிவற்ற இறைவன் என்ற உண்மைக்கு சாட்சி பகர்ந்தார். வனாந்தரத்தில் நபி யஹ்யா மனிதர்களுடைய பாவத்தின் அளவைப் பார்த்து துயரப்பட்டார். பாவமன்னிப்பு ஏற்ற மனந்திரும்புதலை அவர்களுக்கு கற்பித்தார். அவர் ஈஸா அல் மஸீஹ்வை கண்டபோது, தன்னுடைய இருதயத்திலே துள்ளிக் குதித்தார். ஏனென்றால் மரணம் அவர் மேற்கொள்ள முடியாத சத்தியத்தினால் நிறைந்த நித்திய மனிதனாகப் பிறந்திருந்தார். ஈஸா அல் மஸீஹ்வின் மனுவுருவாதல் அல்லது அவருடைய பிறப்பு மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். காரணம் அதன் மூலமாகவே இறைவனுடைய சதாகால வாழ்வு மனித உடலில் தோன்றியது. இதோடு மரணத்தின் மீதான ஜீவனின் வெற்றி ஆரம்பமானது. ஏனென்றால் மரணத்திற்குக் காரணமான பாவம் அவருக்குள் நீக்கப்பட்டிருந்தது. இந்தக் ரஹ்மத்தின் ஆழத்தை உணர்ந்தவராக, யஹ்யா நபி ஈஸா அல் மஸீஹ்வில் இருந்த இறைவனின் நிறைவை உயர்த்தி மகிழ்ந்து கொண்டாடினார். தெய்வத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது என்று பவுல் அறிக்கை செய்தார். அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம் என்ற உன்னத வார்த்தைகளில் இந்த சத்தியங்கள் ஒருங்கிணைத்துக் கூறுப்படுகிறது.

 

ஈஸா அல் மஸீஹ்வின் நிறைவு என்பது என்ன? அவரிடமிருந்து நாம் எதைப் பெற்றுக்கொண்டோம்? இதுவரை நாம் பார்த்த 14 வசனங்களிலும் நாம் பார்த்த ஈஸா அல் மஸீஹ்வின் ஆளத்துவத்தைக் குறித்த விளக்கங்களை நீங்கள் நினைத்துப் பார்த்தால், அவருடைய ஆளத்துவத்தின் மேன்மையையும் அனுதினமும் நம்மை வந்தடையும் அவருடைய கிருபைப் பிரவாகத்தையும் நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்: மனிதர்களுடைய வாயிலிருந்து வார்த்தைகள் புறப்பட்டு வருவதைப்போல, ஈஸா அல் மஸீஹ் பிதாவின் வாயிலிருந்து புறப்பட்டுவரும் இறைவார்த்தையாக (கலிமா) இருக்கிறார். அவர்தான் இறைவனுடைய உள்ளான இதயமாகவும், அவருடைய சித்தமாகவும், சாரமாகவும், மகிழ்ச்சியாகவும் காணப்படுகிறார். நற்செய்தியின் வார்த்தைகள் நம்மிடத்தில் வந்து, நம்முடைய சிந்தைக்குள் நுழைந்து, நம்முடைய சித்தங்களை மாற்றும்போது, ஈஸா அல் மஸீஹ் அவர்களும் நம்முடைய இருதயத்திற்குள் நுழைந்து அவருடைய மேன்மையின்படி நம்மை மாற்றுகிறார். இது உன்னதமான கிருபையில்லையா?

 

ஈஸா அல் மஸீஹ் இறைவனுடைய ஜீவன்; விஞ்ஞானிகள் வீடுகளையும், பாலங்களையும், பெரிய குண்டுகளையும் உருவாக்க முடியும், ஆனால் உயிரை உருவாக்க முடியாது. இறைவன் தங்களுக்குக் கொடுத்த உயிரை தங்கள் சந்ததிக்கு கொடுக்கும் பொறுப்பை பெற்றோர் பெற்றிருக்கிறார்கள். இது கிருபையில்லையா? இந்த உயிர் சீக்கிரத்தில் போய்விடும் என்பதால் ஈஸா அல் மஸீஹ் நித்திய ஜீவனாகிய தம்முடைய ஆவியானவரை முஃமீன்களுக்கு கொடுக்கிறார். எல்லா முஃமீன்களும் இறைவனுடைய உயிரில் பங்குள்ளவர்களாக இருப்பதால் ஒருபோதும் மரிப்பதில்லை. இது கிருபையில்லையா?

 

ஈஸா அல் மஸீஹ் உலகின் ஒளியாயிருக்கிறார். அவரே இருளை வென்றவராகவும் காரிருளில் வெளிச்சத்தைப் படைப்பவராகவும் இருக்கிறார். இருளில் இருக்கும் உலகத்திற்கு அவர் நம்பிக்கையைக் கொடுக்கிறார், பெலவீனத்தில் முனகிக்கொண்டிருக்கும் உலகத்திற்குள் வல்லமையை அனுப்புகிறார். மஸீஹ்வின் ஒளி தன்னுடைய பிரகாசத்தினால் உலகத்திலுள்ள கடுமையான இருளை விரட்டும் வல்லமை படைத்தது. மனிதர்கள் அவரை விசுவாசித்தால், அரசியலிலும் தொழிற்சாலைகளிலும், குடும்பங்களிலும் திருச்சபைகளிலும் உண்மையையும் நேர்மையையும் அவர் கொடுக்கிறார். இது கிருபையின் மேல் உண்டாகும் கிருபையில்லையா?

 

ஈஸா அல் மஸீஹ் இவ்வுலகத்தின் சிருஷ்டிகர். அவரில் இறைவனுடைய வல்லமையின் முழுமையும் குடியிருக்கிறது. அவருடைய அற்புதங்கள் அவருடைய அதிகாரத்தைக் காட்டும் அடையாளங்களாக இருந்தன. அவருடைய ஜீவனுக்கு மரணத்தின் மீது அதிகாரம் இருக்கிறது என்பதையே அவருடைய உயிர்ததெழுதல் நிரூபிக்கிறது. அவருடைய உடலில் அவர் புவியீர்ப்பு சக்தியை தோற்கடித்து தண்ணீரின் மீது நடந்தார். ஐந்து அப்பங்களை அவர் பிட்டு ஐயாயிரம் பேர் திருப்தியாகும் வரை உணவளித்தார். உங்களுடைய தலையிலுள்ள மயிர்களின் எண்ணிக்கையையும் அவர் அறிவார். அவருடைய பராமரிக்கும் கிருபைக்கு நீங்கள் எப்போது அடிபணிவீர்கள்? இன்னும் நீங்கள் மஸீஹ்வின் பரிபூரணத்தை அதிகமாக அறிய விரும்புகிறீர்களா? அவர்தான் இந்த உலகங்களுக்குச் சொந்தக்காரர். அனைத்து பொருட்களும், செல்வங்களும், உங்களுடைய வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும், உங்கள் முழுமையுமே அவருக்குத்தான் சொந்தம். அவர்தான் உங்களை உருவாக்கினார், உங்களைக் காப்பவரும் அவரே. ஈஸா அல் மஸீஹ்வே அனைத்துக்கும் சொந்தக்காரர். அவருக்காக காரியங்களை நிர்வகிக்கும்படி அவரே எல்லாவற்றையும் உங்கள் கரங்களில் கொடுத்திருக்கிறார். உங்களுடைய உடல்கட்டமைப்பு, உங்களுடைய சிந்தனைகள், உங்களுடைய பெற்றோர் அனைத்துமே இறைவனால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கொடைகள். அவருடைய கிருபைக்காக நீங்கள் எப்போது அவருக்கு நன்றி செலுத்தப் போகிறீர்கள்? மனுவுருவாதலையும் ஈஸா அல் மஸீஹ்வின் பிறப்பையும் குறித்த அற்புதமான காரியம் யாதெனில் தெய்வத்துவத்தின் பரிபூரணமெல்லாம் ஒரு குழந்தையில் மாம்சமானதே. இந்த அற்புதம் நிகழ்வதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏசாயா நபி பரிசுத்த ஆவியின் அகத்தூண்டுதலினால் தீர்க்கதரிசனமாக உரைத்திருக்கிறார்: நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேல் இருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும் (ஏசாயா 9:6). மனிதன் படைக்கப்படும்போது இருந்த தூய சாயலை, மஸீஹ்வில் இறைவன் மீட்டெடுத்திருக்கிறார் என்ற உண்மையை மனிதர்களுடைய மனம் புரிந்துகொள்ளுவதற்கு மந்தமாயுள்ளது என்பது மிகவும் துக்கமானது. ஈஸா அல் மஸீஹ்வே ஞானமும் மகிமையும் நிறைந்தவர், ஒளியூட்டும் ஆலோசகர், வல்லமையுள்ள நித்திய இறைவன். மாட்டுத்தொழுவத்தில் இருந்த குழந்தையில் இறைவனுடைய எல்லா குணாதிசயங்களும் வரங்களும் காணப்பட்டது. ஈஸா அல் மஸீஹில் இறைவன் நம்மிடத்தில் வந்தார் என்ற அற்புதமான கிருபையை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அப்பொழுது இறைவன் நம்முடனிருக்கிறார் என்று சொல்ல முடியும்!

ஈஸா அல் மஸீஹ் தன்னுடைய நற்குணங்களைத் தன்னிலேயே வைத்திருக்க விரும்பவில்லை. அப்படியிருந்தால் அவர் பரலோகத்திலேயே இருந்திருப்பார். அவர் பரலோகத்தின் பாதையை நமக்குக் காண்பிக்கும்படியாக, பிதாவோடு நம்மைச் சேர்த்து, அவருடைய முழுமையினால் நம்மை நிறைக்கும்படியாக, அவர் இந்த உலகத்தில் வந்து, நம்முடைய சாயலை அணிந்துகொண்டு, நம்முடைய தாழ்வான சாயலை அவர் எடுத்துக்கொண்டார். இறைவனுடைய முழுமையைத் திருச்சபைக்குக் கொண்டுவருவதே அவருடைய நோக்கம் என்று இவ்வாறே பவுலும் சாட்சியிடுகிறார். எபேசியர் 1:23; 4:10 மற்றும் கொலோசெயர் 2:10 ஆகிய வசனங்களை வாசித்துப் பாருங்கள். அப்பொழுது நீங்கள் துதியின் நீரோட்டத்தினால் இழுத்துச் செல்லப்பட்டு, உங்களுடைய ரப்பின் கிருபையை மேன்மைப்படுத்துவீர்கள். நீங்கள் பரிதாபகரமாக உங்கள் பாவத்தில் வாழ வேண்டாம், ஈஸா அல் மஸீஹின் நிறைவுக்காக உங்கள் இருதயங்களைத் திறவுங்கள். அப்பொழுது எண்ணற்ற பரக்கத்துக்கள் உங்களிடம் வந்து சேரும். உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு கிருபையின் ஊற்றாக அவர் உங்களை மாற்றுவார்.

 

துஆ

 யா ரப்பீ ஈஸா அல் மஸீஹே, நீரே இறைமகன். எல்லா வல்லமையும், அன்பும் சத்தியமும் உம்மிடத்தில் உண்டு. நீர் எங்களைவிட்டு தூரமாக இருக்காமல், எங்கள் நடுவில் வந்து வாழ்ந்ததனால் நாங்கள் உமக்கு முன்பாக பணிந்தகொண்டு மகிழ்வடைகிறோம். நீர் எங்களை நேசிக்கிறீர். நீர் மனிதனாக வந்து எங்களை மீட்டுக்கொண்டீர். நீர் கிருபையின் மேல் கிருபை அருளுவதால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

 

கேள்வி:

  1. ஈஸா அல் மஸீஹின் முழுமை என்பதன் பொருள் என்ன?

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *