ஈஸா அல் மஸீஹ்வை ஏற்றுகொண்ட ஒரு தவ்ஹீத் மௌலவியின் ஷஹாதா

ஈஸா அல் மஸீஹ்வை ஏற்றுகொண்ட ஒரு தவ்ஹீத் மௌலவியின் ஷஹாதா

அஹமத் என்ற தவ்ஹீத் மவ்லவி    தன்னுடைய வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்ட அனுபவ சாட்சியை நம்முடன் பகிர்ந்துகொள்ளுகிறார்.

 
அஹமத்

 
என்னுடைய சிறுவயது

எனது 10 வயதில் யாராலும் நேசிக்கமுடியாத ஒரு பாவியாக இருந்தேன். எல்லோருக்கும் ஒரு உதவாக்கரையாகவே இருந்தேன். சிறுவயதிலேயே தகப்பனை இழந்த என்னை 10 வயதின் பிறகு வளர்க்கும் பொறுப்பை ஏற்க யாரும் முன்வரவில்லை. மனமுடைந்து 3 முறை தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தேன். கடைசியாக தூர தேசத்தில் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு மாமா என்னை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார். நானும் சந்தோஷத்தோடு அவரோடு சென்றேன். மீண்டும் எனது ஊருக்கு நான் வருவதானால் என்னை வெறுத்தொதுக்கிய குடும்பத்தார் அனைவரும் என்னை மதிக்கவேண்டும் என்று ஒரு தீர்மானத்தோடு தான் நான் என் மாமனாரோடு சென்றேன்.

அங்கு சென்றவுடன் தான் புரிந்தது, என்னை படிக்க வைப்பதற்கோ எனக்கு உதவுவதற்கோ அல்ல. என்னை அவர்கள் வீட்டு வேலைகள் செய்வதற்கே என்னை அழைத்துச்சென்றார் என்று. என் தாயார் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பியதால் பாடசாலைக்குச் செல்லவும் குர்ஆன் மத்ரஸாவுக்குச் செல்லவும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த ஊரில் மௌலவிமாருக்கு மிகவும் மதிப்புக் கொடுப்பதை நான் கண்டேன். நானும் ஒரு மௌலவியானால் என்னையும் மதிப்பார்கள், எனது ஊருக்கு திரும்பிச் செல்ல வேண்டுமானால் நான் ஒரு மௌலவியாகவேண்டும் எனும் எண்ணம் எனக்குள் தோன்றியது.
 
மத்ரஸா வாழ்க்கை

எனது தாயின் எதிர்ப்புக்கு மத்தியிலும் மத்ரஸாவில் சேர்ந்து ஓத ஆரம்பித்தேன். மத்ரஸாவுக்குச் செல்லமுன் நான் காதிரியா எனும் தரீக்காவில் தைக்கா சுகைப் ஆலிமிடம் நஸீயத் பெற்றிருந்தேன். மத்ரஸாவில் ஷாதுலிய்யா சாவியாவில் கவனம் செலுத்தினேன். தொடர்ந்து தப்லீக் தஃவா என்னை கவர்ந்தது. ஜமாத்தில் செல்வதன் மூலமாக பாவம் செய்யாமல் வாழலாம் என்று நினைத்து அவர்களோடு இணைந்து செயல்பட்டேன்.
ஐந்து வருடங்களின் பின் எனது சொந்த ஊருக்குச் செல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. என் மன விருப்பத்தின்படி, எல்லோரும் என்னை மதித்தனர். எனது உறவினர்களின் வீடுகள் எல்லாம் எனக்காகத் திறக்கப்பட்டது. மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதே நேரம் ஒரு வெறுமையையும் எனது உள்ளத்தில் உணர்ந்தேன். ஏதோ ஒன்றை நான் இழந்திருப்பதை உணர்ந்தேன்.

 
தவ்ஹீத் வாழ்க்கை

மீண்டும் சில நாட்களுக்கு பின் மத்ரஸா வாழ்க்கைக்குத் திரும்பினேன். சந்தர்ப்ப சூழ்நிலையால் மத்ரஸா மாறவேண்டியிருந்தது, புது மத்ரஸா! புது நண்பர்கள்! இவை என்னை பாதிக்கவில்லை. ஆனால் புதுக் கொள்கை அது என்னை மிகவும் பாதித்தது. ஏற்றுக்கொள்ள மிகவும் கஷ்டப்பட்டேன். தொடர் போராட்டத்தின் பின் அனேக ஆராய்ச்சிகளின் பின் ஒரு தௌஹீத் வாதியாக மாறினேன். தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன் ஆகிய கொள்கைகளைக்குறித்தும் ஒரு தெளிவோடு வாழ்ந்து வந்தேன்.

புத்தக வாசிப்பு அதிகரிக்க, இலங்கையை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்றவேண்டும் எனும் கொள்கையை உறுதியாக பற்றிக்கொண்டு, அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டேன். என்னோடு எனது நண்பர்கள் குழுவொன்றும் சேர்ந்து கொண்டனர்.
இவ்வாறிருக்கையில் ஒரு நாள் ஒரு விவாத ஒலிநாடாவை செவிமடுக்கக் கிடைத்தது. அது பி. ஜெய்னுல்ஆப்தீன் அவர்களுக்கும் உமர் அலி அவர்களுக்கும் நடந்த விவாதம். இதனை செவிமடுத்துவிட்டு எனது நண்பர்களோடு மீண்டும் ஒரு ஆராய்ச்சியில் இறங்கினேன்.
73 கூட்டங்களில் சுவர்க்கம் செல்லும் ஒரேயொரு கூட்டம் எது? பைஅத் செய்யாமல் ஒருவன் மரித்தால் அவன் நரகத்திற்கா செல்வான்? பிரிந்திருப்பது பித்அத் ஆகுமா? இவையே எமது ஆராய்ச்சி தலைப்புகள். கடைசியில் நாங்கள் எடுத்த முடிவுகள் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் சரியாக வாழும் ஒரே ஒரு கூட்டம் ஜமாதுல் முஸ்லிமீன்! உமர் அலிக்கு பைஅத் செய்வதே சரியான வழிமுறை. மத்ரஸா விதிமுறைகளை மீறி அதனை நடைமுறைப்படுத்தினோம். முஹம்மது நபியவர்களும் சஹாபாக்களும் எப்படி வாழ்ந்தார்களோ அப்படியே அவர்களைப் போலவே வாழ முற்பட்டோம். சில மாதங்களில் மத்ரஸாவில் ஏனையோர் எங்களை அடையாளம் காணத் தொடங்கினர்.

பிரச்சினை அதிபர் வரைசெல்ல, நண்பர்களின் எதிர் காலத்தை பாதுகாக்கும் நோக்கில் நான் மத்ரஸாவிலிருந்து யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் உமர் அலியைத் தேடிச் சென்றேன்.
அது ஒரு எளிய கிராமம். வறுமையில் வாடும் மக்கள். அதேநேரம் மதீனாவில் முஹம்மது நபியும் சஹாபாக்களும் வாழ்ந்த வாழ்க்கைக்கொத்த வாழ்க்கை முறை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அங்கிருந்துகொண்டு எனது மத்ரஸா நண்பர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளவதே எமது திட்டமாக இருந்தது.
சில நாட்கள் செல்லும் போதுதான் சிறார்களை பாடசாலைக்கு அனுப்பாமல் அவர்கள் வாழ்க்கையை கண்மூடித்தனமான கொள்கையின் பெயரில் வீணடிப்பதை அவதானித்தேன். எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. எனது மூளையைப் பயன்படுத்தி சரியான கூட்டத்தை தேடுவதில் உச்சத்திற்கே சென்றிருந்தாலும் எனக்குள் ஒரு வெறுமை தொடர்ந்தும் இருந்து வந்தது.

எனது வாழ்க்கையை திரும்பிப் பார்த்தேன். பாடசாலை படிப்பு 8ம் வகுப்பு வரை. மத்ரஸா படிப்பு 6 வருடங்கள். அந்த கிராமத்திற்கு நான் ஒரு முஹாஜிரீன் என்பதால் எனக்கு திருமணம் செய்து தரவும் அநேகர் முன் வந்தனர். சுமார் 4 மாதங்கள் அங்கிருந்து அவர்கள் கொள்கையை தெளிவாகப் படித்தேன். எனது நிலைமையையும் எனது எதிர்பார்ப்புகளையும் தெளிவாக உமர் அலியிடம் கூறி, அங்கிருந்து கிழக்கு மாகானத்தில் ஒரு முஸ்லீம் கிராமத்திற்குச் சென்றேன்.
 
மவ்லவியாக பணி செய்தல்

அங்கு நான் சென்ற அடுத்த நாள், பெரிய பள்ளி மௌலவி வெளிநாடு சென்று விட்டார். அந்த தொழில் எனக்குக் கிடைத்தது. அத்தோடு அங்குள்ள ஒரு மத்ரஸாவில் இணைந்து, மீண்டும் படிக்கத் தொடங்கினேன். மேலும் சாதாரண தர பரீட்சையும் எழுதினேன். அந்த கிராமத்தில் ஜும்மா பயானும் செய்தேன்.

பள்ளியில் இமாமாக இருப்பது எவ்வளவு போலியான வாழ்க்கை என்பதை மிக சீக்கிரத்தில் கற்றுக்கொண்டேன். அந்த பள்ளியில் 4 ஜமாத்களை சேர்ந்தவர்கள் தொழுகைக்கு வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கொள்கையை பின்பற்றி தொழுகை நடாத்த, பயான் பண்ண என்னை வற்புறுத்துவார்கள். நான் உண்மையென்று அறிந்ததை போதிக்க எனக்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை.
மிகவும் மனவேதனையடைந்த நான், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, எனது சொந்த ஊருக்கு சென்று விட்டேன். அங்கு சென்று இனிமேல் ஒரு ஜமாஅத்துடனும் இணையமாட்டேன், எனது உயர்தர படிப்பில் கவனம் செலுத்தி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைத்து, படிப்பில் கவனம் செலுத்திவந்தேன்.
இதற்கிடையில் காத்தான்குடியில் அமைந்துள்ள, வஹ்ததுல் வுஜுத் எனும் கொள்கையை பின்பற்றும் அப்துல்லாஹ் பயில்வான் குழுவினரையும் அப்துர் ரவப் மௌலவியையும் (குழுவை) சந்தித்து புத்தகங்கள் வாங்கி படித்து கற்றுக்கொண்டேன். இவை எல்லாவற்றையும் செய்தாலும் எனது உள்ளத்திலுள்ள வெறுமை மட்டும் நீங்க வில்லை.

பல வருடங்களாக முஸ்லீம்களோடு மட்டும் வாழ்ந்த நான் இப்பொழுது அந்நியர்களோடும் பழக ஆரம்பித்தேன். பின்நேர வகுப்புகளில் இந்து கிறிஸ்தவ நண்பர்களையும் சந்தித்தேன். ஒரு சில கிறிஸ்தவர்களை அவதானித்த போது, அவர்களின் வாழ்க்கை என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் என்று நினைத்தேனோ அப்படி வாழ்கிற சில கிறிஸ்தவாகளை சந்தித்தேன்.

நான் மத்ரஸாவில் இருக்கும் போது, கிறிஸ்தவ மதத்தைப் பற்றி படித்துள்ளேன். பீஜே போன்றவர்கள் பைபிளுக்கு விரோதமாக எழுதிய புத்தகங்களை வாசித்துள்ளேன். ஏன், பைபிளில் முதல் ஐந்து புத்தகங்களையும் இன்னும் சில பகுதிகளையும் வாசித்துள்ளேன். கிறிஸ்தவர்களுக்கெதிராக பயான் செய்துள்ளேன்.

ஆனால் நான் இப்பொழுது கண்ட கிறிஸ்தவர்கள் மிகவும் வேறுபட்டவர்களாக எனக்குத் தோன்றினார்கள். கிறிஸ்தவன் என்றால் குடிகாரன், பன்றி சாப்பிடுபவன், எப்பொழுதும் இஸ்லாத்தை அழிக்க ஆவலாய் இருப்பவன். ஏமாற்றுக்காரன் என்றெல்லாம் பயான் செய்த எனக்கு நேரில் கண்ட கிறிஸ்தவர்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்கள். எனது முஸ்லீம் நண்பர்கள் அவர்களை ஏளனம் செய்தாலும் அவர்கள் பொறுமையாகவே இருந்தார்கள்.

திடீரென எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. ‘நான் ஏன் முஸ்லீம்களுக்கு சேவை செய்ய என் காலத்தை ஒதுக்க வேண்டும்? கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாத்தை போதித்து, அவர்களை சுவனபதிக்கு அழைத்துச் சென்றால் எனக்கெவ்வளவு பெருமையாயிருக்கும்’. உடனடியாக இத்திட்டத்தை அமுல்படுத்த ஆயத்தமானேன்…
 
வாழ்வின் திருப்புமுனை

இப்படிச் சொன்னவுடன் நீங்கள் நான் கிறிஸ்தவனாக மாறிவிட்டதாக நினைக்கின்றீர்களா? தொடர்ந்து வாசியுங்கள். கடைசியில் முடிவுக்கு வருவோம்.

ஒருமுறை சில கிறிஸ்தவ நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருக்கும் போது, எனது முஸ்லீம் நண்பர் ஒருவர் கிறிஸ்தவர்களை பார்த்து “இவர்கள் என்ன பாவத்தை செய்துவிட்டும் இவர்கள் கடவுளிடம் சென்று மன்னிப்புக்கேட்டால் அவர் மன்னித்துவிடுவாராம்” என்று ஏளனம் செய்தான். எல்லாம் அறிந்தவன் என்ற நினைப்போடு நானும் “உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? உண்மையான மார்க்கத்திலிருக்கிற எங்களுக்கே தெரியாது! அப்படியிருக்க சிலை வணங்கிகளான உங்களுக்கு எப்படி தெரியும்? ஏன் இப்படி பொய் பேசுகிறீர்கள்” என்று வாதாடினேன். அதற்கு அந்த நண்பர்கள் எந்த சலனமுமில்லாமல் “எங்கள் பாவங்களுக்காக தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார். அவர் இரத்தத்தினால் கழுவப்பட்டு நாங்கள் பரிசுத்தமாக்கப்பட்டுள்ளோம்” என்றான் அவர்களில் ஒருவன்.

நானும் வாதத்துக்காக அவர்கள் கருத்துக்களை எதிர்த்து ஏளனம் செய்தாலும் இவர்களின் பாவ மன்னிப்பை குறித்திருந்த உறுதி என்னை மிகவும் கவர்ந்தது. உண்மையான மார்க்கத்திலிருக்கிற எனக்கில்லாத உறுதி இவர்களிடம் எப்படி? எனும் கேள்வி எனக்குள் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருந்தது. ஈஸா நபியவர்களை அல்லாஹ் வானத்திற்கு உயர்த்திவிட்டான். சிலுவையில் அறையப்பட்டது ஒரு ஆட்டிடையன் என்பதை எப்படியாவது இவர்களுக்கு தக்க ஆதாரத்துடன் ஒப்புவிக்கவேண்டும் என்ற எண்ணம் வலுவடைந்தது. கிறிஸ்தவர்களோடு அநேக நேரத்தை கழித்தால்தான் அவர்களின் தவறுகளை கண்டுபிடிக்கலாம் என்று எண்ணி ஒவ்வொருநாளும் விளையாட்டுக்கு ஒதுக்கிய நேரத்தை சில கிறிஸ்தவ வாலிபர்களோடு செலவிட தீர்மானித்தேன்.

நாங்கள் ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணியளவில் சந்திப்போம். இரவு 8 மணிவரை எங்கள் உரையாடல் தொடரும். மிகவும் இனிமையான மாலை வேளைகள் அவை!

வெள்ளிக் கிழமை கிறிஸ்தவ சபைகளில் நடைபெறுகிற உபவாச கூட்டங்களுக்கும் சென்றேன். அங்கே பாடுகின்ற பாடல்கள் சொல்லப்படுகிற சாட்சிகள் எல்லாம் என்னை மிகவும் ஈர்த்தது. இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் ஆவலாய் உன்னை தம் கரம் நீட்டியே இயேசு அழைக்கிறார்… என்று எல்லோரும் பக்தியோடு பாடும் போது எனக்கும் பாட தோன்றும், ஆனால் மிகவும் கஷ்டப்பட்டு என்னை அடக்கிக்கொள்வேன்.

இப்படியே சில மாதங்கள் கடந்தோடிவிட்டது. கிறிஸ்தவர்கள் என்றால் பன்றி சாப்பிடுபவர்கள், மது அருந்துபவர்கள், பெண்களோடு உல்லாசமாயிருப்பவர்கள் என்பதுதான் எனது மனதில் கிறிஸ்தவர்களைக் பற்றியிருந்த கண்ணோட்டம். மேலும் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களை பணம் கொடுத்து மதம் மாற்றுபவர்கள் என்று நான் போதிக்கப்பட்டதோடு நானும் போதித்துள்ளேன். ஆனால் நான் கண்ட இந்த கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்டவர்களாக நான் காணவில்லை. இவர்கள் என்னை மதம் மாற்றவேண்டும் என்று எந்த முயற்சியும் எடுத்ததாக நான் காணவில்லை. ஆனால் எனக்கு சத்தியத்தை காண்பிக்குமாறு பிரார்த்தித்தார்கள். இவர்கள் மது அருந்துபவர்களாகவோ! மாதுகளோடு கூத்தடிப்பவர்களாகவோ நான் காணவில்லை. ஆனாலும் எனது மார்க்கம் தான் சரியானது என்று தொடர்ந்தும் அவர்களோடு வாதாடினேன்.
ஒரு நாள் ஒரு போதகர் என்னிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டா என்று கேட்டார். நானும் ஆம் என்றேன். அவர் எனக்கு 2 புத்தகங்களை கொடுத்தார். நான் அவற்றை பெற்று வீடு சென்று வாசிக்கத் தொடங்கினேன். ஒரு புத்தகம் முஸ்லீம்களில் சத்திய வழியை கண்டடைந்தவர்கள் பத்துபேரின் சுய சரிதைகள். மற்றது இஸ்லாமியர் கேட்கும் 100 கேள்விகளுக்கான பதில்கள். இந்த இரண்டாவது புத்தகம் என்னை சிந்திக்கத் தூண்டியது.


கலிமதுல்லாஹ்


ரூஹ{ல்லாஹ்

குலாமன் ஸகீய்யா


நிச்சயமாக நாம் உம்மை மரணிக்கச் செய்து, எம்மளவில் உயர்த்திக்கொள்வோம்…


போன்ற குர்ஆன் பகுதிகள் என்னை சிந்திக்க வைத்தது. தொடர்ந்தும் குர்பானின் விளக்கத்தையும் ஈஸாவின் மரணத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, ஈஸா எனது பாவத்திற்காக குர்பானான இறைவனுடைய கலிமா என்பது தெளிவாக தெரிந்தது.
 
நான் ஈஸாவை(இயேசு) ஏற்றுக்கொண்டால் எனக்கு என்ன நடக்கும் என்று சிந்தித்தேன்.

அப்பொழுது என்னை மூன்றுவிதமான பயம் ஆட்கொண்டது.

1. என்னை வீட்டைவிட்டு விரட்டிவிடுவார்கள்.
2. எனது சமுதாயம் என்னை எதிர்க்கும். நான் தாழ்த்தப்படுவேன்.
3. சில வேளை எனது தீர்மானம் தவறானதாக இருந்தால் நான் நரக நெருப்பில் வேக வேண்டி ஏற்படும்.


இவ்வாறான பயங்கள் என்னை ஆட்கொள்ள, நான் என்ன செய்வதென்று தெரியாமல் சில நாள் மிகவும் கஷ்டப்பட்டேன். செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ஒரு எண்ணம் தோன்றியது.
அநேக கிறிஸ்தவர்கள் இறைவன் என்னோடு பேசினார். எனக்கு ஒரு வெளிப்பாட்டை தந்தார் போன்ற விஷயங்கள் பேசுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் எனது நம்பிக்கை அல்லாஹ் நபிமார்களோடு மட்டும்தான் பேசுவான், அவனால் சதாரண மனிதர்களோடு பேச முடியாது என்பதாகும். இந்த இக்கட்டான தருணத்தில் நினைத்தேன். என்னை இந்த சிக்கலிலிருந்து விடுவிக்க அல்லாஹ்வாலன்றி வேறு யாராலும் முடியாது. ஆகவே நான் அவனிடம் உதவி கேட்பதுதான் சிறந்த வழியென்று எண்ணினேன்.

இரவு நித்திரைக்கு செல்லுமுன் ஒரு துஆவை செய்தேன் “வானத்தையும் பூமியையும் படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று நம்புகிறேன். ஆனால் உன்னிடம் வரும் வழி இஸ்லாமா? கிறிஸ்தவமா ?என்று எனக்கு வெளிப்படுத்துவாயாக. அதற்காக எனது வாழ்வை அர்ப்பணிக்கிறேன். ஆமீன்”

இந்த துஆவை தகஜ்ஜதுக்கு எழுந்தவுடனும் செய்தேன். இவ்வாறு ஒரு வாரம் உருண்டோடியது. ஒருநாள் காலையில் உயர்தர பரீட்சைக்காக படித்துக்கொண்டிருந்துவிட்டு, 6 மணியலவில் குளிராக இருந்தபடியால் கட்டிலில் அமர்ந்தவாறு சுவரில் சாய்ந்து போர்வையால் போர்த்திக்கொண்டிருந்தேன். எனது சகோதரி அவர் கணவருக்கு தேனீர் தயாரித்து கொண்டிருந்தாள். என் கண்கள் மூடியிருந்தது. ஆனால் நான் தூக்கத்திலிருக்கவில்லை. அந்த வேளையில் ஒரு காட்சி என்முன் தோன்றியது.

அந்த காட்சியில்…

நான் ஒரு மலையிலுள்ள ஒற்றையடிபாதையில் ஏறிச்செல்கிறேன். நான் முதலாவதாக கிறிஸ்தவத்தை பற்றி கலந்துரையாடிய சகோதரன் அந்த மலை உச்சியிலிருந்து அதனை வெட்டிக்கொண்டிருந்தார். அவர் அருகில் வெள்ளை ஆடை அணிந்த ஒருவர் அமர்ந்திருந்தார்.நான் அவர் முகம் பிரகாசமாக இருந்தது. நான் அவர்கள் அருகில் செல்லும் போது, என்னை சுட்டிக்காட்டி ‘ இவர் யார்’ என்று அந்த வெள்ளாடை அணிந்தவர் கேட்க, மலையை வெட்டிக்கொண்டிருந்த சகோதரனும் அவருக்கு பிரதியுத்தரமாக “இவர் சத்தியத்தை தேடுகிறார். சத்தியத்தை கண்டடைவார்” என்றார்.

நானும் அவர்களுடன் சேர்ந்து கதைத்துகொண்டு “ஆம் நூறு வீதம் சத்தியம் என்று தெளிவானால் நான் எனது வாழ்க்கையை அதற்காக அர்ப்பணிக்க ஆயத்தமாக இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை கடந்து சென்றேன்.
அதே காட்சியில்…

நானும் எனது இஸ்லாமிய நண்பர்களும் குளிப்பதற்காக ஒரு குளத்துக்கு செல்கிறோம். அங்கே எனது நண்பன் ஒருவன் மூழ்கப்போனான். பிறகு குளித்துவிட்டு கரையேறியவுடன் என்னை ஒரு வல்லமை ஆட்கொண்டது. என்னால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. எனது உடலை அசைக்கவோ பேசவோ என்னால் முடியவில்லை. எனது நண்பர்கள் என்னை பார்த்து நகைத்தார்கள். அப்படியே நான் சுயநினைவை இழந்துவிட்டேன் அந்த காட்சியில்.
மீண்டும் எனக்கு நினைவு வரும் போது, ஒருவர் எனது நெஞ்சில் கை வைத்துகொண்டும் இன்னும் ஒருவர் எனது அவர் கரத்தை பிடித்துகொண்டும் ஏதோ ஒரு மொழியில் அவர் ஏதோ சொல்ல, மற்றவரும் ஏதோ ஒரு மொழியில் ஏதோ சொன்னார். சுற்றியிருந்த ஆயிரக்கணக்காக மனிதர்கள் ‘அல்லேலூயா’ என்று உறக்க கூறினர்.
அந்த காட்சியிலும் எனது கட்டிலிலிருந்தும் நான் எழும்பினேன். அன்று வரை எனது உள்ளத்தை ஆட்கொண்டிருந்த வெறுமை என்னைவிட்டு நீங்கி, எனது உள்ளம் சந்தோஷத்தால் நிறம்பியது. அந்த சந்தோஷத்தை எனது வார்த்தைகளால் எழுத முடியவில்லை.

இந்த காட்சியில் நான் மறுபிறப்படைந்த அனுபவத்தை பெற்றேன். எப்படி என்கிறீர்களா? குளத்தில் குளித்து கறையேறியது ஞானஸ்நானத்தின் அனுபவத்தை பெற்றேன். பழைய மனுஷன் மறித்து புது மனிதன் பிறந்த அனுபவம் எனக்குள் இருந்த வெறுமை போய், இனம்புரியாத சந்தோஷத்தால் நிறம்பியதிலிருந்து பெற்றுகொண்டேன். இந்த சந்தோஷம் இன்னும் எனக்குள் இருக்கிறது. என்னை வாழ வைக்கிறது.
இப்பொழுது தொடர்ந்து இறைவேதமாம் பைபிளை வாசிக்க தொடங்கினேன். ஈஸாவின் நாமத்தில் துஆ செய்ய ஆரம்பித்தேன். ஆனால் எனக்குள் இன்னும் பயம் இருந்தது. இவையெல்லாம் மறைமுகமாகதான் செய்யவேண்டி ஏற்பட்டது.

டிசம்பர் மாதம் 24ம் திகதி பக்கத்து ஊர் ஒன்றில் நடாந்த ஒரு கிறிஸ்துமஸ் ஆராதனையில் கலந்துகொண்டேன். இரவு 12 மணியளவில் மிகவும் கடுமையான குளிரில் ஆராதித்துகொண்டிருந்தோம். சடுதியாக சில ஒளிக்கதிர்கள் என்னை நோக்கி வருவதை உணர்ந்து கண் திறந்து பார்த்தேன். (கிறிஸ்தவர்கள் கண்மூடியே பிரார்த்திப்பார்கள்) வித்தியாசம் எதையும் காணவில்லை. மீண்டும் கண் மூடி பிரார்த்தனையில் ஈடுபட, அந்த கதிர்கள் என்னை நோக்கி வந்தன. அதனை எப்படியாவது பெற்றுகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் பிரார்த்தனையில் அவதானம் அங்குமிங்கும் செல்லாதவாறு காத்துகொண்டேன். சற்று நேரத்துக்கு பிறகு அந்த ஒளிக்கதிர்கள் என் தலையை பட்டது.
கடும் குளிரில் ஜெர்கின் போட்டுக்கொண்டும் நடுங்கிகொண்டு பிரார்த்தித்துகொண்டிருந்த எனக்கு, அவ்வேளையில் வியர்த்து வடிந்தது, எனது உடம்பு உஷ்ணமானது. சந்தோஷ மிகுதியால் பக்கத்திலிருந்தவரை கட்டிப்பிடித்துகொண்டேன். எனக்குள் இருந்த பயம் அகன்று “என்ன நடந்தாலும் ஈஸாவுக்காக(இயேசுவுக்காக) வாழ்வேன்” என்ற உறுதி எனக்குள் ஏற்பட்டது.

இப்படிதான் இறைவன் சத்தியத்தை எனக்கு காண்பித்தார். கடந்த 14 வருடங்களாக இறைவன் தனது ரஹ்மத்தால் என்னை வழிநடாத்தி வருகிறார். துன்பங்கள துயரங்களை கடந்து செல்லும் போதும் அவர் வாக்குமாறாமல் என்னோடு இருந்து எனது பாடுகளை அவர் சுமக்கிறார். எனது எதிர்காலத்தை குறித்த நம்பிக்கை மட்டுமல்ல மரணத்துக்கு பின் சுவனபதியை(பரலோகத்தை) அடைவேன் என்ற நிச்சயத்தையும் தந்துள்ளார்.

15 Responses to ஈஸா அல் மஸீஹ்வை ஏற்றுகொண்ட ஒரு தவ்ஹீத் மௌலவியின் ஷஹாதா

 1. தாஜ் says:

  மிகவும் அருமையாயிருக்கிறது உங்களது சாட்சி! இயேசுகிறிஸ்து உங்களோடு என்றென்றும் கூடவே இருக்கிறார்! ஆமென்!

 2. Suthagar says:

  God bless you dear brother….

 3. shikfareed says:

  ஏக இறைவன் ஏசுவா?
  பிஜே வுடன் அல்லது தவ்ஹீத் ஜமாஅத் மவ்லவிகளுடம் விவாதம் செய்ய தயாரா?

  • அருமை சகோதரரே, தாராளமாக வரச்சொல்லுங்கள் எழுத்து விவாதத்துக்கு. நேரடி விவாதங்களில் கெட்டவார்த்தை பேசுவதையும் பொய் பித்தலாட்டங்களையுமே கடந்த 20 வருடங்களாக அவதானித்து வருகிறேன். அது பாமரர்களையும் அன்னியர்களையும் மிகவும் வேதனை படுத்துகிறது.

  • Jesus is Lord says:

   உங்க இஸ்லாமிய கடவுளின் பெயர் என்ன????

 4. sha says:

  amen God with you , i feel real happy to read your testimony

 5. Wesley says:

  Glory to JESUS…
  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்க்கையை மாற்றிய சாட்சி மிகவும் அருமை.. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.

 6. Jaya says:

  Thank you for the testimony. Jesus Be with you always and your Ministry.

 7. rajkumar says:

  உங்கள் சாட்சி மிகவும் அருமை, கிறிஸ்துவின் கிருபையும், இறையருளும், ஆசீரும் இன்றும் என்றும் சதாகாலமும் உங்களோடும் உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் சந்ததியினர் அனைவரோடும் நிலைத்திருக்கட்டும்

  • Irainesan says:

   இறை சமாதானம் உங்களோடும் உங்கள் குடும்பத்தாரோடும் இருப்பதாக

Leave a Reply to sha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *