உங்களுக்கு ஷரீஆவா அல்லது கிருபையா வேண்டும்?

ஈஸா அல் மஸீஹின் செய்தியின் மையம் என்ன?

 

யோவான் 1:17-18 


17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. 18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங்கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

 

பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையிலான வித்தியாசம் ஷரீஆவினால் உண்டாகும் நீதிக்கும் கிருபையினால் உண்டாகும் நீதிக்கும் இடையிலான வித்தியாசம் என்று கூறலாம். பத்துக்கட்டளைகளையும், இரத்த பலிகளைக் குறித்த கட்டளைகளையும், வாழ்க்கையில் ஒழுங்கைக் கொண்டுவரும் கட்டளைகளையும் இறைவன் மூஸா நபிக்கு கொடுத்தார். யாரெல்லாம் இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டார்களோ அவர்கள் வாழ்வை பலனாகப் பெற்றார்கள். ஆனால் அவற்றில் ஏதாவதொன்றையாகிலும் மீறியவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு ஒரு மனிதனும் முழுமையானவனாக இல்லாத காரணத்தினால் ஷரீஆ மரணத்திற்கேதுவான நியாயத்தீர்ப்பாக இருந்தது. ஷரீஆவின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாத காரணத்தினால் அதற்கு முன்பாக மிகவும் பக்தியுள்ளவர்கள்கூட மனந்திரும்பினவர்களாகவும் தங்கள் பாவத்துக்காக துக்கப்பட்டவர்களாகவும் உடைந்துபோய் காணப்பட்டார்கள். அரைகுறையானவர்கள் தங்களுடைய வாழ்க்கை இறைவனைப் பிரியப்படுத்துகிறது என்பதுபோல தங்களைப் பற்றி மேன்மையாக எண்ணிக்கொண்டார்கள். இது அவர்களை சுய மேன்மைக்கும் நியாயப்பிரமாண அடிப்படைவாதத்திற்கும் நடத்திச் சென்றது. அவர்கள் அன்பை மறந்து தங்களுடைய சுயநலச் செயல்களைப் பற்றி பெருமைபாராட்டினார்கள். ஷரீஆ தன்னில் தான் பரிசுத்தமாயிருக்கிறது, ஏனெனில் அது பரிசுத்தமுள்ள கடவுளைப் பிரதிபலிக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக ஒவ்வொரு மனிதனும் தீமையானவனாகக் காணப்படுகிறான். இந்த வகையில் ஷரீஆ நம்மை இழிவுக்கும் மரணத்திற்கும் நடத்திச் செல்லுகிறது.

 

இவ்வாறு மரணத்தினால் முழு மனுக்குலமும் நிறைந்து காணப்படுகிற சூழ்நிலையில் இன்ஜீல் யோவான் முதல் முறையாக ஈஸா அல் மஸீஹ்வை இழிவிலிருந்து மீட்பவராகவும் இறைவனுடைய கோபத்திலிருந்து மனித சமுதாயத்தை இரட்சிப்பவராகவும் முன்வைக்கிறது. நாசரேத்திலிருந்து வரும் மனிதனாகிய ஈஸா பரிசுத்த ஆவியின் நிறைவினால் அபிஷேகிக்கப்பட்ட மஸீஹ் ஆவார். அவரே இராஜாதி இராஜாவும், இறைவனுடைய வார்த்தையும் பிரதான ஆசாரியருமாயிருக்கிறார். அவரே நம்பிக்கைக்கும் இரட்சிப்புக்குமான அனைத்து சாத்தியக்கூறுகளின் தொகுப்புமாவார்.

 

ஈஸா அல் மஸீஹ் ஒரு புதிய சட்ட முறையைக் கொண்டுவராமல், ஷரீஆவின் சாபத்திலிருந்து நம்மை மீட்டார். அவருடைய மேலான அன்பினால் நமக்காக நியாயப்பிரமாணத்தின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றினார். நம்முடைய பாவங்களையும் உலகத்திற்கெதிரான நியாயத்தீர்ப்பையும் அவர் தன்னுடைய தோள்களில் சுமந்து, நம்மை இவ்வாறு இறைவனுடன் ஒப்புரவாக்கினார். நம்முடைய பாவங்களினிமித்தமாக இறைவன் இனிமேல் நமக்கு எதிராக இருப்பதில்லை. ஆனால் நாம் நம்முடைய ரப்பாகிய ஈஸா அல் மஸீஹின் மூலமாக நாம் இறைவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். ஈஸா அல் மஸீஹ் பரலோகத்திலிருக்கிற தமது பிதாவினிடத்திற்கு எழுந்தருளி, தம்முடைய பரிசுத்த ஆவியை (ரூஹுல் குத்தூஸை) நம்மீது பொழிந்திருக்கிறார். அவர் நியாயப்பிரமாணத்தை நம்முடைய இருதயங்களில் பதித்து, நம்முடைய உள்ளுணர்வுகளை தூய்மையும், உண்மையும், கனமுள்ள சிந்தனைகளினால் நிரப்பியிருக்கிறார். நாம் இனிமேல் ஷரீஆவின்படி வாழ்வதில்லை, மஸீஹ் நமக்குள் இருக்கிறார். இந்த வகையில் இறைவன் அவருடைய அன்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குரிய வல்லமையை நமக்குக் கொடுக்கிறார்.

 

ஈஸா அல் மஸீஹின் வருகையுடன் ரஹ்மத்தின் காலம் ஆரம்பித்திருக்கிறது, நாம் அதில்தான் வாழ்கிறோம். நம்முடைய சுயநீதியை ஆதரிப்பதற்காக இறைவன் நம்மிடம் காணிக்கைகளையோ, பலிகளையோ கேட்பதில்லை, நமக்கு தெய்வீக நீதியைக் கொடுக்கும்படியாக அவர் தம்முடைய குமாரனையே அனுப்பினார். அவரை ஈமான்கொள்கிறவன் முழுமையாக நீதிமானாக்கப்படுகிறான். இதனிமித்தம் நாம் அவருக்கு நன்றி சொல்லுகிறோம், அவரை நேசிக்கிறோம், நம்மையே அவருக்கு ஜீவ குர்பானியாக ஒப்புக்கொடுக்கிறோம்.

 

ஈஸா அல் மஸீஹ் நம்மைத் திக்கற்றவர்களாக விடுவதில்லை, அவர் நம்முடன் இருக்கிறார், நமக்கு தன்னுடைய வரங்களைப் பொழிந்தருளுகிறார். பாவமன்னிப்புக்கோ, பரிசுத்த ஆவியுடனான ஐக்கியத்திற்கோ நாம் தகுதியானவர்கள் அல்ல. அவரிடத்திலிருந்து எந்தவொரு வரத்தையோ பரக்கத்தையோ பெற்றுக்கொள்ளவும் நமக்குத் தகுதியில்லை. எல்லாமே அவரிடமிருந்து நமக்குக் கிருபையாகக் கிடைக்கிறது. உண்மையில் நாம் அவருடைய கோபத்திற்கும் அழிவிற்குமே தகுதியானவர்கள். ஆனால் நாம் மஸீஹ்வோடு இணைக்கப்பட்டிருக்கிற காரணத்தினால், அவர் தம்முடைய கிருபையைப் பொழிந்தருளும் இறைவனுடைய பிள்ளைகளானோம். பாவத்தின் அடிமைகளாயிருப்பதற்கும் கிருபையின் பிள்ளைகளாயிருப்பதற்கும் இடையிலான வித்தியாசத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இந்தக் கிருபை பரிசுத்தருடைய இருதயத்தில் எழும் ஒரு உணர்வு மட்டுமல்ல. மாறாக இது சட்ட உரிமையின்படியான அன்பு. ஒரு பாவியின் பாவம் அவனுடைய உடனடியான மரணத்தைக் கோரி நிற்கிற காரணத்தினால், இறைவன் தான் விரும்புகிற எவரையும் மன்னித்துவிட முடியாது. ஆயினும் நமக்கான மஸீஹ்வின் பதிலாள் சிலுவை மரணம் எல்லா நீதியையும் நிறைவேற்றியிருக்கிறது. இவ்வாறு கிருபை நம்முடைய உரிமையாகவும், இறைவனுடைய இரக்கம் அசைக்கமுடியாத ஒரு மெய்மையாகவும் மாறியிருக்கிறது. ஈஸா அல் மஸீஹ்விலுள்ள கிருபையே இறைவனுடனான நம்முடைய வாழ்க்கைக்கு சட்டப்படியான ஆதாரம். செயலில் சுதந்திரமுள்ளவரும் நியாயத்தினால் கட்டுப்பட்டவருமாகிய இந்தக் இறைவன் யார் என்று நீங்கள் கேட்கலாம். நாங்கள் இவ்வாறு உங்களுக்கு பதிலளிக்கிறோம்: பல மதங்கள் கருத்தோடும் தீவிரமாகவும் இறைவனை அறிய முயற்சி செய்திருக்கிறது. ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் பூமியில் வைக்கப்பட்ட, ஆனால் வானத்தை எட்ட முடியாத ஏணிகளுக்குச் சமமாயிருக்கின்றன. ஆனால் ஈஸா அல் மஸீஹ் வானத்திலிருந்து இறங்கி வந்து பூமியில் பொறுத்தப்பட்ட ஏணியாவார். அவர் மூலமாக இறைவனைச் சந்திக்கும் எவரும் கைவிடப்படுவதில்லை.

 

நம்முடைய பாவங்கள் பரிசுத்த இறைவனிடமிருந்து நம்மைப் பிரிப்பதால் யாரும் நித்திய சிருஷ்டிகரைப் பார்த்ததில்லை. இறைவனைப் பற்றி அனைத்துக் கூற்றுக்களும் மனிதருடைய தெளிவற்ற கற்பனைகளேயாகும். ஆனால் ஈஸா அல் மஸீஹ் இறைவனுடைய குமாரன், ஆதியிலிருந்தே அவருடன் இருப்பவர், தெய்வீக திரியேகத்துவத்தில் ஒரு நபர். இவ்வாறு பிதா யார் என்பதை குமாரன் அறிந்திருந்தார். அதற்கு முந்திய வெளிப்பாடுகள் அனைத்தும் குறைவுள்ளது. ஆனால் ஈஸா அல் மஸீஹ்வே இறைவனுடைய முழுமையான வார்த்தையாகவும், அனைத்து சத்தியத்தின் தொகுப்பாகவும் காணப்படுகிறார்.

 

ஈஸா அல் மஸீஹின் செய்தியின் மையம் என்ன?

 

பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே என்று இறைவனை அழைக்கும்படி அவர் நமக்குக் கற்பித்திருக்கிறார். இவ்வாறு அழைப்பதன் மூலம் இறைவனுடைய அடிப்படைத் தன்மையே பிதா என்ற தன்மைதான் என்பதை அறிவித்தார். இறைவன் ஒரு சர்வாதிகாரியோ, ஆக்கிரமிப்பாளரோ, அழிப்பவரோ அல்ல. அதேவேளையில் அவர் அக்கறையற்றவரோ அலட்சியமானவரோ அல்ல. ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைகளைக் கவனிப்பதைப் போல அவர் நம்மைப் பராமரிக்கிறார். ஒரு பிள்ளை சேற்றில் விழுந்தால், அதைத் தூக்கிவிட்டு சுத்தப்படுத்துகிறார். பாவமும் குற்றமும் உள்ள உலகில் அவன் தொலைந்து போகட்டும் என்று அவர் விட்டுவிடுவதில்லை. இறைவன் நம்முடைய தகப்பன் என்பதை நாம் அறிந்துகொண்டபடியால், நம்முடைய கவலைகளினாலும் பாவங்களினாலும் ஏற்படும் வேதனை அகன்று போகிறது. நம்முடைய தகப்பனிடத்தில் திரும்பும்போது, நாம் சுத்திகரிக்கப்பட்டு வரவேற்கப்படுகிறோம். நாம் இறைவனுடன் என்றென்றும் வாழ்கிறோம். இந்த தகப்பன் என்னும் வார்த்தை மஸீஹினுடைய வார்த்தைகளையும் செயல்களையும் தொகுத்துக் கூறுகிறது.

 

ஈஸா அல் மஸீஹ் தன்னுடைய மனுவுருவாதலுக்கு முன்பாக தன்னுடைய பிதாவுடன் இருந்தார். இந்த மென்மையான படம் மஸீஹ்வுக்கும் பிதாவுக்கும் இடையிலுள்ள அன்பின் உறவைக் காண்பிக்கிறது. மரித்து எழுந்த பிறகு குமாரன் தன்னுடைய பிதாவினிடத்தில் திரும்பினார். அவர் இறைவனுடைய வலது பாரிசத்தில் மட்டும் உட்காரவில்லை, பிதாவினுடைய மடியிலும் அமர்ந்தார். இது அவர் பிதாவோடு ஒன்றானவர், அவர்தான் பிதா என்பதைக் காண்பிக்கிறது. இவ்வாறு இறைவனைப் பற்றிய மஸீஹ்வின் கூற்றுக்கள் எல்லாமே உண்மையானவை. இறைவன் யார் என்பதை நாம் ஈஸா அல் மஸீஹ்வில் காண்கிறோம். பிதாவைப் போல குமாரன் இருக்கிறார், குமாரனைப் போல பிதாவும் இருக்கிறார்.

 

துஆ

 பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய குமாரனாகிய ஈஸா அல் மஸீஹ்வை நீர் எங்களுக்காக உலகத்தில் அனுப்பினதினாலே நாங்கள் உம்மைத் துதித்து உமக்கு நன்றி செலுத்துகிறோம். நியாயப்பிரமாணத்தின் பயங்கரத்திலிருந்து நீர் எங்களை விடுவித்து, தெய்வீக நீதியில் எங்களை நாட்டியதற்காக நாங்கள் உமக்கு முன்பாகப் பணிகிறோம். ஒவ்வொரு ஆவிக்குரிய வரங்களுக்காவும் உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். பிதாவின் நாமத்தினால் நாங்கள் பெற்றுக்கொள்ளும் சகல நன்மைகளுக் காகவும் நாங்கள் உம்மை உயர்த்துகிறோம்.

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *