கானாவூர் கல்யாணத்தில் கராமத்

 


இன்ஜீல் (யோவான் 2:1-10)


1 மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.  2 இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். 3 திராட்ச ரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். 4 அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். 5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். 6 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. 7 இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். 8 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். 9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: 10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.

 

ஈஸா அல் மஸீஹ் தம்முடைய சகாக்களை யோர்தான் மலையிடுக்கின் யஃயா நபியுடைய மனந்திரும்புதலின் பள்ளதாக்கிலிருந்து, கலிலேயா மலைப்பகுதியிலிருந்த கானாவூர் கல்யாண மகிழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். இந்த 100 கிலோமீட்டர் பிரயாணம் இரண்டு ஏற்பாடுகளுக்கு இடையிலுள்ள தீவிரமான மாற்றத்தை நமக்குக் காண்பிக்கிறது. இனிமேல் முஃமீன்கள் ஷரீயாவின் நிழலில் வாழ வேண்டிய அவசியமில்லை, அவர்கள் உதய சூரியனும் சமாதானக் காரணருமாகிய ஈஸா அல் மஸீஹோடு நீதியின் மகிழ்ச்சியில் வாழலாம். ஈஸா அல் மஸீஹ் யஃயா நபியை போல ஒரு துறவியல்ல. அதனால் அவர் தன்னுடைய சகாக்களோடு ஒரு கல்யாண விருந்துக்குச் சென்றதே ஒரு அற்புதம்தான். ஈஸா அல் மஸீஹ் தியானத்தையும் கடுமையான நோன்பையும் புறக்கணிக்கவில்லை, ஆனால் இவ்விதமான வாழ்க்கைமுறையினால் பெரிய பயனில்லை என்று கற்பித்தார். நம்முடைய கெட்டுப்போன இருதயம் புதிய தன்மையுள்ளதாக மாற்றப்பட வேண்டும், புதிய பிறப்பே அவசியம் என்பதை காண்பித்தார்.

 

இந்த சஹாக்கள் ஈஸா அல் மஸீஹோடு அந்த விருந்துக்குச் சென்றார்கள். ஆனால் நாத்தான்வேலோ கானாவைச் சேர்ந்தவனாகவே இருந்தான் (21:2). மணவாளனுடைய குடும்பத்தை ஈஸாவின் தாயாகிய மரியாமுக்கு தெரிந்திருக்க வேண்டும். யூசுப் ஏற்கனவே மரித்திருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது. மரியாள் விதவையாகிவிட்டபடியால், மூத்தமகனாக ஈஸா குடும்பத்துக்குப் பொறுப்பானவராக செயல்பட்டுக்கொண்டிருந்தார். ஆகவே தங்களுடைய சொந்தக்காரர்களுடைய தேவையைச் சந்திக்கும்படி மரியம் அவரிடத்தில் வருகிறார். யோர்தானிலிருந்து திரும்பியதிலிருந்து ஈஸா அல் மஸீஹ் சாதாரண மனிதனாகக் காணப்படவில்லை. ரூஹுல் குத்தூசினால் மறுரூபப்படுத்தப்பட்டவராக தன்னுடைய உலகக் கடமைகளிலிருந்து முன்னேறி இறைவனைச் சேவிக்க ஆரம்பித்திருந்தார். அதில் அவருடைய சீஷர்கள் அவரைப் பின்பற்றினார்கள்.

 

மரியம் தன்னுடைய மகனுடைய அன்பையும் கரிசனையையும் அறிந்திருந்த காரணத்தினால் அவரைச் சார்ந்திருந்தார். அவளுடைய அன்பு ஈஸா அல் மஸீஹின் முதலாவது அற்புதத்திற்கு வழிநடத்திச் சென்றது. மஸீஹ்வின் அன்பின் பேரிலுள்ள நம்பிக்கை இறைவனுடைய கரத்தை அசைக்கிறது. ஈஸா சொல்லவதைச் செய்யுங்கள் என்று மரியம் வேலைக்காரர்களிடம் சொன்னாள். ஏதாவது ஒரு வகையில் ஈஸா அல் மஸீஹ் உதவி செய்வார் என்று மரியாளுக்குத் தெரியும். மரியாள் வேலைக்காரர்களுக்குச் சொன்ன வார்த்தைகள் அல் ஜமாத்தின் கோட்பாடாக இருக்க வேண்டும்: அவர் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்! ஈஸா அல் மஸீஹ்வுக்கு மாத்திரமே ஒப்புக்கொடுங்கள்; ஈஸா அல் மஸீஹின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிதல் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு அதிசயங்களைக் கொண்டுவரும்.

 

சுமார் 600 லிட்டர் கொள்ளளவுள்ள வுழூ செய்யும் தொட்டிகள் நிரப்பப்பட்டன. இது விருந்தாளிகள் வுழூ செய்வதற்காக அதிக தண்ணீரைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. ஈஸா அல் மஸீஹ் அங்கிருக்கும்போது வேறு வகையான சுத்திகரிப்பு தேவையாயிருக்கிறது. ஒருவன் முழுவதும் சுத்திகரிக்கப்படாவிட்டால் அவன் ஆட்டுக்குட்டியின் கல்யாண விருந்தில் கலந்துகொள்ள முடியாது.

 

முதலில் கல்யாண விருந்து தடையில்லாமல் நடைபெறவேண்டும். சுத்திகரிப்பின் தண்ணீரை ஈஸா அல் மஸீஹ் அமைதியாக சுவையுள்ள திராட்சை இரசமாக மாற்றினார். இது எவ்வாறு நடத்தப்பட்டது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவருடைய சிந்தப்பட்ட இரத்தம் ஆட்டுக்குட்டியின் கல்யாணவிருந்தில் கலந்துகொள்ள விரும்புகிறவர்களுக்குப் போதிய சுத்திகரிப்பை உண்டுபண்ணும் என்று இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறிகிறோம். இது மதுபான வெறிகொள்ளுதலை ஆதரிக்கவில்லை. ரூஹுல் குத்தூஸ் மதுபான வெறியுள்ள நடத்தை எதையும் ஆதரிப்பதில்லை. சுவையுள்ள திராட்சை இரசம் போதிய அளவு பரிமாறப்பட்டது. இது மஸீஹின் அளவற்ற பாவமன்னிப்பு மனுக்குலமனைத்திற்கும் போதுமானது என்பதை அடையாளப்படுத்துகிறது. அனைவரும் பரலோக மகிழ்ச்சியில் பங்குபெறட்டும். ரப்புல் ஆலமீனின் பந்தியில் எல்லாரும் நன்றியறிதலுடன் மஸீஹ்வின் பிரசன்னத்திற்கு அடையாளமான அப்பத்தையும் இரசத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். இந்தப் பாவமன்னிப்பு நமக்கு ஆறுதலைத் தருவதாக.

 

இன்ஜீல் (யோவான் 2:11-12)


11 இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். 12 அதன்பின்பு அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சிலநாள் தங்கினார்கள்.

 

ஈஸா அல் மஸீஹின் படைக்கும் சக்தியைப் பார்த்து சஹாக்கள் ஆச்சரிப்பட்டார்கள், இயற்கையின் மீது அவருக்கிருந்த அதிகாரத்தை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அவருடைய மகிமையைப் பார்த்து, அவர் இறைவனால் அனுப்பப்பட்டவர் என்று அறிந்துகொண்டார்கள். இது அவரை ஈமான் கொள்ளும்படி அவர்களை வழிநடத்தியது. ஈமான் வளருவதற்குக் காலம் தேவை, புரிந்துகொள்வதற்கு கீழ்ப்படிதல் தேவை. ஈஸா அல் மஸீஹின் செயல்களைப் படித்து, அவருடைய பேச்சுக்களை ஆழமாக திக்ரு செய்வீர்களாக இருப்பீர்கள் என்றால், அவருடைய ஆளத்துவத்தின் மேன்மையை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.

ஈஸா அல் மஸீஹ் தன்னுடைய குடும்பத்தை விட்டு, இவ்வுலகில் இறைவனுக்குச் சேவைசெய்யும்படி போனார். ஆனால் அவருடைய தாயாருடனும் அவருடைய சகோதர்களுடனும் அவருக்கிருந்த உறவு தொடர்ந்தது. சில காலம் அவர்களும் சஹாக்களுடன் இணைந்து பிரயாணம்பண்ணினார்கள். திபேரியாக் கடற்கரையோரம் இருந்த முக்கிய நகரமாகிய கப்பர்நகூமுக்கு அவருடைய சகோதரர்கள் அவருடன் சென்றார்கள். கானாவூரில் நடைபெற்ற அற்புதத்தினிமித்தமாக மட்டுமன்றி, தனிப்பட்ட முறையில் அவரை விசுவாசித்தார்கள். தங்களுக்கு நன்மை ஏற்படும்படி அவர்கள் ஈஸா அல் மஸீஹோடு ஒட்டிக்கொண்டார்கள்.

 

துஆ:

யா ரப்பே ஈஸாவே, உம்முடைய ஐக்கியத்திலும், சந்தோஷத்திலும் நிலைத்திருக்கும்படி, எங்களை கல்யாண விருந்துக்கு அழைத்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் நீதியிலும் தூய்மையிலும் நிலைத்திருந்து, உம்மை அநேகருக்காக கொடுத்ததைப்போல, நாங்களும் உம்மைப் பின்பற்றி அவற்றில் நிலைத்திருப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *