நான் ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்?

 யோவான் 3:1-3 

1 யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். 2 அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். 3 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

 

அந்த சமுதாயத்திலிருந்து நிக்கோதேமு என்று ஒருவர் தோன்றினார். அவர் பயபக்தியுள்ளவரும், சமுதாயத்தில் முக்கியமானவரும் ஷுறா சபையிலுள்ள எழுபதுபேரில் ஒருவருமாவார். இறைவனுடைய குத்ரத் மஸீஹ்வில் செயல்படுவதை அவர் அறிந்துகொண்டார். ஒருவேளை அவர் இந்தப் புதிய தீர்க்கதரிசிக்கும் யூத சபைக்குமிடையில் ஒரு பாலத்தைக் கட்ட விரும்பியிருக்கலாம். அதே வேளையில் அவர் உலமா சபைக்கும் பொதுமக்களுக்கும் பயந்திருந்தார். அவர் ஈஸா அல் மஸீ்ஹ்வை குறித்து நிச்சயமற்றவராக இருந்த படியால் அவருடன் சேருவதற்கு முன்பாக யாருக்கும் தெரியாமல், இரகசியமாக இருட்டில் அவரைக் காண வந்தார்.

 

றபீ என்ற வார்த்தையின் மூலமாக, நிக்கோதேமுவும் பொதுவாக ஈஸா அல் மஸீஹ்வைப் பற்றி மக்கள் நடுவில் நிலவிய அதே கருத்தைக் கொண்டிருந்தார் என்பதை அறியலாம். ஈஸா தன்னைப் பின்பற்றும் சிலருடன் நடமாடி அல் கிதாப் எனும் இறைவேதத்தைப் போதித்து வந்தபடியால் மக்கள் அவரைப் றபீ என்றே நினைத்தார்கள். ஈஸா அல் மஸீஹ்வின் அற்புதங்கள் அவர் இறைவனிடமிருந்து வந்தவர் என்பதை உறுதிசெய்கிறது என்பதை நிக்கோதேமு ஏற்றுக்கொண்டார். இறைவன் உம்முடன் இருக்கிறார், உம்மைத் தாங்குகிறார். நீர் மஸீஹாக இருக்கலாமோ? என்று அவர் அறிக்கையிட்டார். இது ஒரு மறைமுகமான ஷஹாதா கூறுதலாகும்.

 

ஈஸா அல் மஸீஹ், நிக்கோதேமுவின் கேள்விக்குப் பதிலளித்தார். ஆனால் அவருடைய கேள்வியின் அடிப்படையில் அல்ல. ஈஸா நிக்கோதேமுவின் இருதயத்தையும், அவருடைய பாவத்தையும், நீதியின் மேல் அவருக்கிருந்த ஏக்கத்தையும் கண்டார். அவருடைய ஆவிக்குரிய குருட்டுத்தன்மையை அவருக்குக் காட்டிய பிறகு தான் ஈஸா அல் மஸீஹ் அவருக்கு எந்த உதவியும் செய்யக்கூடும். நிக்கோதேமு பயபக்தியுள்ளவராக இருந்தபோதிலும், அவர் இறைவனை அறிந்திருக்க வில்லை. ஈஸா அல் மஸீஹ் அவருடன் வெளிப்படையாகப் பேசி, எந்த மனிதனும் தன்னுடைய சொந்த முயற்சியினால் நிச்சயமாக இறைவனை அறிய முடியாது; அவனுக்கு ரூஹுல்லாஹ்வின் மறுபிறப்புத் தேவை என்று கூறினார்.

 

இது மனிதனுடைய தர்க்க முறையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இறையியல் படிப்புகளையும் பிடிவாதமான கொள்கைகளையும் பற்றி ஈஸா அல் மஸீஹ் கூறும் நியாயத்தீர்ப்பாயிருக்கிறது. ஏனென்றால் இறைவனை அறிகிற அறிவு அறிவுபூர்வமான விரிவுரைகளினால் அல்ல, மறுபிறப்பினாலேயே வருகிறது. ஒரு வானொலிப் பெட்டியில் நீங்கள் எத்தனை பொத்தான்களைத் திருப்பினாலும் எந்த படத்தையும் பார்க்க முடியாது. படம் பார்க்க வேண்டுமெனில் உங்களுக்குத் தேவையானது தொலைக் காட்சிப் பெட்டி, வானொலிப் பெட்டியல்ல. அவ்விதமாகவே சுபாவப்படியான மனிதனும் எவ்வளவு பயபக்தியுள்ளவனாகவும் செயல் வீரனாகவும் இருந்தாலும் அவனுடைய உணர்வுகளினாலேயோ அல்லது சிந்தனைகளினாலேயோ இறைவனை அறிந்தகொள்ள முடியாது. ஆவிக்குரிய உணர்வடைவதற்கு ஒரு புரட்சி தேவைப்படுகிறது, அதுதான் மறுபிறப்பு அல்லது புதிய படைப்பு எனப்படுகிறது.

 

 

யோவான் 3:4-5 4

அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். 5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் எனறு மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

ஈஸா அல் மஸீஹின் பதிலின் மூலம் தனக்கு இறைவனைப் பற்றித் தெரியாது என்று அறிந்தகொண்ட நிக்கோதேமு குழப்பமடைந்தார். அவர் இரண்டாவது பிறப்பைப் பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை. அதைப் பற்றி கேள்விப்பட்டபோது, ஒரு முதிர்ந்த மனிதன் எப்படி தாயின் கருவில் மீண்டும் சென்று பிறக்க முடியும் என்று சிந்தித்தார். இதுவும் அவருடைய அறிவின்மையையே காட்டுகிறது. பிதாவாகிய றப்புல் ஆலமீன் பரிசுத்த ஆவியின் (ரூஹுல் குத்தூசின்) மூலம் தனக்குப் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியும் என்பதை அவர் அறிந்திருக்க வில்லை.

ஈஸா அல் மஸீஹ் நிக்கோதேமுவில் இரக்கம் கொண்டார்; இறைவனுடைய இராஜ்யத்திற்கான வழியை தான் அறியவில்லை என்று நிக்கோதேமுவை அறிக்கை செய்ய வைத்த பிறகு, நானே சத்தியம் என்ற உண்மையை ஈஸா அல் மஸீஹ் வலியுறுத்துகிறார். ஒரே நிபந்தனையாகிய இரண்டாம் பிறப்பின்றி நாம் இறைவனுடைய இராஜ்யத்திற்குள் நுழைய முடியாது என்று நாம் ஈமான் கொள்ள வேண்டும்.

இரண்டாம் பிறப்பு என்பது என்ன? அது பிறப்பு, ஒரு கருத்து அல்ல. அது மனிதனுடைய முயற்சியினால் கிடைப்பதுமில்லை, ஏனெனில் எந்த மனிதனும் தன்னுடைய முயற்சியினால் பிறப்ப தில்லை. இறைவனே பெற்றோராகவும் உயிரளிப்பவராகவும் இருக்கிறார். இது ரஹ்மத்தினால் கிடைக்கும் ஆவிக்குரிய பிறப்பு, இது குணாதிசயத்தில் ஏற்படும் ஒரு மறுமலர்ச்சியோ அல்லது சமூக ஒழுக்கமோ அல்ல. எல்லா மனிதருமே பாவத்தில் பிறந்து, அந்நிலையிலிருந்து முன்னேற நம்பிக்கையற்றிருக்கிறார்கள். ஆவிக்குரிய பிறப்பில் இறைவனுடைய ரூஹ் மனிதகுலத்திற்குள் வருகிறது.

இது எவ்வாறு நடக்கிறது? இது ஆவியினாலும் ஜலத்தினாலும் நடைபெறுகிறது என்று ஈஸா அல் மஸீஹ் குறிப்பிடுகிறார். தண்ணீர் என்பது யஹ்யா நபியுடைய ஞானஸ்நானத்தையும் கல்யாணத்தில் வைக்கப்பட்டிருந்த சுத்திகரிப்பின் தொட்டிகளையும் குறிக்கிறது. பழைய உடன்படிக்கைக்குரியவர்களுக்கு தண்ணீர் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்படுவதற்கு அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது என்பது தெரியும். அதாவது இங்கே ஈஸா அல் மஸீஹ், ஏன் நீ யஹ்யா நபியிடம் சென்று உன்னுடைய பாவங்களை அறிக்கை செய்து ஞானஸ்நானம் பெறக்கூடாது? என்று கேட்பதைப் போல் உள்ளது. இன்னொரு இடத்தில் ஈஸா அல் மஸீஹ் ஒருவன் என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றி வரக்கடவன் என்று கூறுகிறார். அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, உங்களுடைய பாவத்தை அறிக்கையிட்டு, அதற்குரிய இறைவனின் நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும். நீங்கள் சீட்கெட்டு, அழிந்து கொண்டிருக்கிறீர்கள்.

ஈஸா அல் மஸீஹ் மனந்திரும்புதலுக்கும் பாவமன்னிப்புக்குமுரிய தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்து மட்டும் கருத்துள்ளவராயிராமல், மனந்திரும்புகிறவனுக்குப் பரிசுத்த ஆவியின் ( ரூஹுல் குத்தூஸின் ஞானஸ்நானத்தைக் கொடுத்து, உடைந்துபோன இருதயத்தில் புதிய வாழ்வைப் படைக்கிறார். மஸீஹ்வின் சிலுவைக்குப் பிறகு நம்முடைய மனசாட்சியைச் சுத்திகரிப்பது அவருடைய விலையேறப்பெற்ற இரத்தம் என்பது நமக்குத் தெரியும். மனந்திரும்புகிறவனைச் சுத்திகரிக்கும் இந்தச் செயல் ரூஹுல் குத்தூசினால் செய்யப் படுகிறது. பரிசுத்த ஆவியானவரின் செயலுக்கு ஒரு மனிதன் கீழ்ப்படியும்போது, அவர் அவனை நித்திய ஜீவனால் நிரப்பி, அதன் கனிகளையும் குணாதிசயங்களையும் அவனுடைய வாழ்வில் வெளிப்படுத்தி, மஸீஹ்வின் வழிநடத்துதலின்படி அவனை ஒரு நல்ல மனிதனாக்குகிறார். இந்த மாற்றங்கள் உடனடியாக நடைபெற்றுவிடுவிதில்லை, இதற்கு காலமெடுக்கும். எவ்வாறு ஒரு கரு கருவறையில் வளருவதற்குக் காலம் தேவைப் படுகிறதோ, அதுபோலவே இதுவும் நடைபெறும். இவ்விதமாகத்தான் ஒரு மனிதனில் இரண்டாம் பிறப்பு நடைபெறுகிறது. அப்போது அவன் உண்மையில் தான் மறுபடியும் பிறந்தவன் என்றும் இறைவன் தன்னுடைய தகப்பன் என்றும் ஈஸா அல் மஸீஹ்வில் தனக்கு நித்திய ஜீவன் உண்டென்றும் நிச்சயமாக அறிந்துகொள்கிறான்.

இறைவனுடைய அர்ஷ் என்ற இந்தக் கருத்தையே ஈஸா அல் மஸீஹ் தன்னுடைய பயானின் நோக்கமாகக் கொண்டிருந்தார். அப்படியானால் இறைவனுடைய இராஜ்யம் (அர்ஷ்) என்பது எது? அது ஒரு அரசியல் இயக்கமல்ல, அல்லது ஒரு பொருளாதார கோட்பாடல்ல, இது மறுபடியும் பிறந்தவர்கள் பிதாவோடும் குமாரனோடும் பரிசுத்த ஆவியோடும் கொண்டுள்ள ஐக்கியம். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஆவியானவர் அவர்கள் மீது வருகிறார், அவர்கள் தங்களை மஸீஹ்வுக்குள் கொடுக்கிறார்கள், அவரையே றப்புவாகவும் இராஜாவாகவும் ஏற்றுக்கொண்டு அவருக்கே கீழ்ப்படிகிறார்கள்.

துஆ:

யா றப்பே யா ஈஸாவே, ரஹ்மத்தினால் மட்டும் உண்டான என்னுடைய மறுபிறப்புக்காக உமக்கு நன்றி. நீர் என்னுடைய கண்களைத் திறந்தீர். நான் உம்முடைய அன்பில் நிலைத்திருக்கச் செய்வாயாக. உம்மை உண்மையாகத் தேடுபவர்களின் கண்களைத் திறந்து, அவர்கள் தங்கள் பாவங்களை அறிந்து அறிக்கையிட்டு, உம்முடைய ரூஹுல் குத்தூசின் வல்லமையினால் புதுப்பிக்கப்பட்டு, சிந்தப்பட்ட உம்முடைய இரத்தத்தைச் சார்ந்திருந்து, உம்மோடுள்ள நித்திய ஐக்கியத்துக்குள் நுழைய உதவிசெய்வாயாக. ஆமீன்.

One Response to நான் ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்?

  1. Lacey says:

    hi stef, like the opennes of the sunday show. although I’m getting rubbed in all the past grievances.like your view of europe and, forpointing out the diffrences with ca, us. its so strange because here we claim to be right, but we actually are left, although healthcare is privatized, every thing is regulated by gvnmt (poorly) same with drgasegillution, it isnt fixed, just halfway? waiting to fail., constructed to fail it seems

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *