நீ ஷரீஆவையும் அகீதாவையும் படித்திருக்கிறாயா?

யஹ்யா நபியவர்களிடம் கேற்கப்பட்ட கேள்விகள்


யோவான் 1:19-21


19 எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, 20 அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். 21 அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு : நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.

 

யஹ்யா நபியை மையமாக வைத்து யோர்தான் பள்ளத்தக்கில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆயிரக் கணக்கானவர்கள் வனாந்தரமான பாதைகளில் அச்சமின்றி நடந்து, உயர்ந்த மலைகளிலிருந்து வறட்சியான பள்ளத்தாக்கிற்கு வந்தார்கள். அவர்கள் புதிய நபியின் குரலைக் கேட்கவும் தங்கள் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறவும் யஹ்யா நபியிடம் வந்தார்கள். இந்த மக்கள் கூட்டம் ஜாஹிலிய்யர்கள் என்றே பெருமையுள்ளவர்கள் பெரும்பாலும் கருதினார்கள். ஆனால் அவர்கள் தெய்வீக வழிநடத்துதலை ஆவலுடன் நாடுபவர்கள். அதிகாரத்தையும் வல்லமையையும் பெற்றிருப்பவர்களை அவர்கள் சீக்கிரத்தில் அடையாளம் கண்டுகொள்வார்கள். அவர்கள் மதச் சடங்குகளை பற்றியோ ஷரீஆவைப் பற்றியோ கேட்க விரும்பவில்லை, அவர்கள் இறைவனைச் சந்திக்க விரும்பினார்கள். இந்த எழுப்புதலைக் குறித்து யூதர்களின் நீதிமன்றமான சனகதரின் அறிந்துகொண்டது. கொர்பானி செலுத்தப்படும் மிருகங்களை அறுக்கும் கடினமான உதவிக்காரர்களாகிய சில ஆசாரியர்களை அவர்கள் அனுப்பினார்கள். யஹ்யா நபியவர்களின் தஃவாவில் இணைவைப்பு காணப்பட்டால் அவரை கொலைசெய்வதே அவர்களின் பணியாகயிருந்தது.

 

ஆகவே இந்த சனகதரின் சங்கத்திலிருந்து அனுபப்பட்டவர்களுக்கும் யஹ்யா நபியவர்களுக்கும் இடையிலான இந்த சந்திப்பு சட்டபூர்வமானதாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் காணப்பட்டது. அந்த நாட்களில் யூதர்கள் ஷரீஆவைப் பொறுத்த மட்டில் கண்டிப்புடனும், எழுத்தின்படியும், அடிப்படைவாதத்தோடும் பொறாமையோடும் சிந்தித்தார்கள். அதனால் ஜெரூசலம் அல் மஸீஹ்வின் ஆவியை எதிர்க்கும் மையமாக மாறியது. பழைய ஏற்பாட்டின் மக்கள் அனைவரும் அல்ல, அவர்களில் ஒரு கூட்டம் இமாம்கள், குறிப்பாக உலமாக்கள், தங்கள் திட்டத்தையும் கட்டுப்பாட்டையும் விட்டு விலகிச் செல்லும் எந்த சமய நடவடிக்கையையும் கவனித்துக்கொண்டிருக்கும் எதிரிகளா யிருந்தார்கள். அதனால்தான் தங்களுடைய கேள்விகளினாலே யஹ்யா நபியை சிக்கவைக்க முடிவு செய்தார்கள். யஹ்யா நபியின் பயானை மக்கள் கருத்துடன் கேட்டுக்கொண்டிருக்கும்போது, நீர் யார்? என்ற முதல் கேள்வியை அவர்கள் யஹ்யா நபியிடம் கேட்டார்கள். பேசுவதற்கு உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்? நீ ஷரீஆவையும் அகீதாவையும் படித்திருக்கிறாயா? இறைவன் உனக்கு கட்டளை கொடுத்து அனுப்பினார் என்று கருதுகிறாயா? அல்லது நீதானா அல் மஸீஹா? என்று கேட்டார்கள்.

 

இக்கேள்விகளுக்குப் பின்னாலுள்ள வஞ்சனைகளை அறிந்தவராக யஹ்யா நபி பொய்யுரையாமல் பதிலுரைத்தார். நான்தான் மஸீஹ் என்று அவன் சொல்வாரானால், அவர்கள் அவனை நியாயம் தீர்ப்பார்கள், மக்கள் அவனைக் கல்லெறிந்து கொலை செய்வார்கள். நான் மஸீஹ் அல்ல என்று சொன்னால், மக்கள் அவரை விட்டு விலகிச் சென்று விடுவார்கள், இனி ஒருபோதும் அவரை முக்கியமான நபராகக் கருதமாட்டார்கள். அந்தக் காலத்தில் இப்ராஹிமுடைய சந்ததியார் ரோமர்களுடைய காலனியாதிக்கத்தின் கீழ் அவமானத்தையும் துன்பத்தையும் அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். ரோமர்களிடமிருந்து தங்கள் அடிமை நுகத்தைத் தகர்த்தெறியும் ஒரு விடுதலையாளருக்காக அவர்கள் ஏங்கிக்கொண்டிருந்தார்கள்.

 

தான் அல் மஸீஹும் அல்ல இறைமைந்தனுமல்ல என்று யஹ்யா நபி வெளிப்படையாகச் சொன்னார். பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதலுக்கு எதிரான ஒரு பட்டப்பெயரை அவர் தனக்கென்று எடுத்துக்கொள்ளவில்லை. இறைவன் தன்னுடைய செய்தியை ஏற்ற நேரத்தில் உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில், அவர் தாழ்மையுடனும் உண்மையுடனும் தன்னுடைய அழைப்பை நிறைவேற்றினார்.

 

தங்களுடைய இந்த முதலாவது முயற்சிக்குப் பிறகு அவர்கள், நீர் இல்யாஸ் நபியா? என்ற கேள்வியைக் கேட்டார்கள். இந்தப் பெயர் மல்கியா 4:5லிருந்து வருகிறது. அந்த வாக்குத்தத்தம் அல் மஸீஹின் வருகைகக்கு முன்பாக, வானத்திலிருந்து தன்னுடைய எதிரிகளின் மேல் அக்கினியை வரவழைத்தவரும் இறைவனுடைய அனுமதியின் பேரில் இறந்தவனை உயிர்ப்பித்தவருமாகிய புகழ்பெற்ற இல்யாஸ் என்ற நபியின் வல்லமையையும் ஆவியையும் உடையவனாகிய ஒரு நபி தோன்றுவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அற்புதமான கதாபாத்திரம் தங்களுடைய தேசத்தின் தலைவன் என்று எல்லாரும் கருதினார்கள். பின்னாட்களில் அல் மஸீஹ் குறிப்பிட்டதுபோல, யஹ்யாதான் அந்த நபியாக இருந்தபோதிலும், அவர் தன்னைத் தாழ்த்தினார் (மத். 11:14). அதன் பிறகு அவர்கள், நபி மூஸா “தனக்குப் பின், தன்னைப்போல ஒரு பெரிய நபியை எழும்பப்பண்ணுவார் என்றும் அவர் ஒரு புதிய மேலான உடன்படிக்கையை அருளுவார் என்றும் சொன்ன அந்த குறிப்பிட்ட நபி நீர்தானா என்று கேட்டார்கள் (உபா. 18:15). இந்தக் கேள்விக்குப் பின்னால் யஹாயாவை ஒரு நபியைப்போல் பேசும்படி அனுப்பிய அதிகாரம் எது என்பதை அறியும் அவர்களுடைய நோக்கம் மறைந்திருந்தது. ஆகவே அவர்கள் அவர் யார் என்றும் யார் அவரை அனுப்பியது என்றும் அவரே சொந்தமாகப் பேசுகிறாரா அல்லது இறைவன் வெளிப்படுத்தியதைப் பேசுகிறாரா என்று அறியும்படி தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

 

மூஸா நபியின் பதவியையும் தரத்தையும் தான் எடுத்துக்கொள்ள யஹ்யா நபியவர்கள் மறுத்துவிட்டார். இறைவனுடைய கட்டளையைப் பெறாமல் ஒரு புதிய உடன்படிக்கையை உருவாக்க அவர் விரும்பவில்லை. அந்த மக்களை இராணுவரீதியாக வழிநடத்தவும் அவர் விரும்பவில்லை. அவர் தனக்கு ஏற்பட்ட பாவச் சோதனையில் உண்மையுள்ளவராக இருந்தார், பெருமையடையவோ இறுமாப்படையவோ இல்லை. அதேவேளையில் அவர் ஞானமுள்ளவராக தன்னுடைய எதிரிகளுக்கு தேவையான வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தி பதிலளித்தார். இந்த கொள்கைகளை நாம் நம்முடைய வாழ்விலும் பயன்படுத்துவது மிக மிக முக்கியமாகும்.

துஆ

 இறைவா! ஒருபோதும் பெருமையடையாத மனிதனாகிய யஹ்யா நபியை எங்களுடைய உலகத்திற்கு அனுப்பியதற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். நாங்கள் மற்றவர்களைவிடப் பெரியவர்கள் முக்கியமானவர்கள் என்ற எங்கள் பெருமையான எண்ணங்களை எங்களுக்கு மன்னியும். நாங்கள் தகுதியற்ற வேலைக்காரர்கள் என்றும் நீரே பெரியவர் என்றும் புரிந்துகொள்ளும்படி எங்களுக்குக் கற்றுத்தாரும்.

 

கேள்வி:

  1. யூதர்களால் அனுப்பப்பட்டவர்கள் கேட்ட கேள்விகளின் நோக்கங்கள் என்ன?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *