பைதுல் முகத்தஸை சுத்திகரித்தல்

 ScreenHunter_442 Sep. 09 10.58ScreenHunter_441 Sep. 09 10.58


யோவான் 2:13-17 


13 பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய், 14 தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும் காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, 15 கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, 16 புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். 17 அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்.

 

 

யூதர்களின் மாபெரும் பண்டிகையாகிய பஸ்கா பண்டிகைக் காலத்தில் ஈஸா அல் மஸீஹ் எருசலேமுக்குச் சென்றார். அந்தப் பண்டிகையின்போது உலகம் முழுவதிலுமுள்ள யூதர்கள் எருசலேமில் கூடி, பஸ்கா ஆட்டுக்குட்டியினிமித்தமாக தங்களுடைய மக்களை இறை கோபம் அழிக்காமல் விட்டுவிட்டதை நினைவுகூர்ந்து ஆட்டுக்குட்டிகளை குர்பான் கொடுப்பார்கள். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை. இறைவனோடு ஒப்புரவாகாமல் செய்யப்படும் தொழுகை பொருளற்றது. யோர்தான் நதியில் ஈஸா அல் மஸீஹ் திருமுழுக்கு எடுத்தது அவர் உலகத்தின் பாவத்தைத் தன்மீது ஏற்றுக்கொண்டார் என்பதன் அடையாளமாயிருக்கிறது. அந்த மக்களுக்காக அவர் மரணம் என்னும் ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்வார். இது அவர் இறை கோபத்தைச் சுமப்பார் என்பதற்கு அடையாளமாயிருக்கிறது. தானே தெரிவுசெய்யப்பட்ட இறைவனுடைய ஆட்டுக் குட்டி என்பதை அவர் நிச்சயமாக அறிந்திருந்தார்.

அவர் எருசலேம் நகரத்துக்குள் நுழைந்து பைதுல் முகத்தஸின் மண்ட பத்தை நோக்கிச் சென்றபோது, இறை இல்லத்தின் மகிமையைப் பார்த்து அவர் பிரமிப்படையவில்லை. மாறாக தன்னுடைய குர்பானின் மூலமாக மனுக்குலத்திற்கு கிடைக்கப் போகிற இரட்சிப்பைக் குறித்து தியானித்துக் கொண்டிருந்தார். அந்த தொழுகைக்கான பள்ளிவாசலில் அவர் அமைதியைக் காணாதது ஆச்சரியமானது. புழுதியையும் இரைச்சலையும், பசுக்களின் கத்துதலையும், வியாபாரிகளின் சச்சரவுகளையும், மிருகங்களின் இரத்தத்தையுமே அவர் கண்டார். மேலும் மற்ற நாட்டு காசுகளை யூத காசாக மாற்றும் காசாளர்களின் இரைச்சலையும் கேட்டார். வெவ்வேறு நாடுகளிலிருந்து அங்கு புனிதப் பயணமாக வந்திருக்கும் யூதர்கள் தங்கள் குர்பானிகளை வாங்குவதற்கு யூதப்பணம் தேவைப்பட்டது.

 

இறைவனுக்கு முன்பாக நாம் நீதிமான்களாவதற்கு பணமும் சிறப்பான முயற்சிகளும் போதும் என்ற தப்பெண்ணத்தை இறை இல்லத்தில் கேட்ட அந்த சத்தங்கள் குறிப்பதாக இருந்தன. ரஹ்மத்தையும் நீதியையும் தங்களுடைய காணிக்கைகளினாலும் மதச் சடங்குகளினாலும் பெற்றுக்கொள்ளலாம் என்று அந்தப் புனிதப் பயணிகள் நினைத்தார்கள். நற்செயல்களினால் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

இதைக் கண்டு ஈஸா அல் மஸீஹ் தன்னுடைய நீதியான கோபத்தை வெளிப்படுத்தினார். உண்மையான தொழுகையைக் குறித்த அவரு டைய வைராக்கியத்தினால் அவர் ஆடு முதலான குர்பானுக்குறிய மிருகங்களையும் வியாபாரிகளுடைய மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் யாரையும் அடித்தார் என்று நாம் வாசிப்பதில்லை. ஆனால் இறைவனுடைய மகத்துவத்திற்கு முன்பாக தங்களை ஒப்புக் கொடுக்க மறுப்பவர்களை தண்டிக்கும் அடிகளைப் போல அவருடைய குரல் காணப்பட்டது. உடைந்த இருதயத்துடன் பரிசுத்தமுள்ள இறைவனுக்கு தங்களை ஒப்புக்கொடுப்பதைத் தவிர இறைவனுக்கு பிரியமான குர்பான் துன்யாவில் வேறு எதுவுமில்லை.

 

இறைவனுடைய பரிசுத்தத்தைப் பற்றி மனிதர்கள் அக்கறையற்றி ருப்பது ஈஸா அல் மஸீஹ்வை துக்கப்படுத்தியது. இச்சம்பவம் நடப்பதற்கு 1300 வருடங்களுக்கு முன்பாகவே இறைவன் தன்னுடைய ஷரீஆவை எழுதிக் கொடுத்திருந்தும் மக்கள் தங்களுடைய மேம்போக்கான பக்தியில் இந்த உண்மைகளை அறியாமல் புறக்கணிப்பது மனித இருதயங்களையும் மனங்களையும் இருள் எவ்வளவு மூடியிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஈஸா அல் மஸீஹ் தொழுகையின் மையமாகிய இடத்தை சுத்திகரிப்பதற்கு இறைவனுடைய கோபத்தையும் பரிசுத்தமான வைராக்கியத்தையும் காண்பித்தார். இது முழுமையான நிலையை பிரதிபலிப்பதாயுள்ளது. அவர் இறைபக்தியின் மையத்தையே மாற்றும்படி கோரினார். அந்த மாற்றம் இறைவனைப் பற்றி மனிதனுடைய மனப்பான்மையில் ஏற்படும் தீவிரமான மாற்றமேயாகும்.

யோவான் 2:18-22 
18 அப்பபொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள். 19 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். 20 அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள். 21 அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார். 22 அவர் இப்படிச்சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள்.

பைதுல் முகத்தஸ் இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டதையும் வியாபாரிகளுடைய ஓலத்தையும் அறிந்த ஆலீம்கள் ஈஸா அல் மஸீஹிடம் வந்து, இதைச் செய்வதற்குரிய அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார்? யார் உம்மை அனுப்பியது? உம்முடைய அதிகாரத்தைப் பற்றிய ஒரு உறுதியான சான்றை எங்களுக்குத் தாரும். என்று கேட்டார்கள். இறை இல்லம் சுத்திகரிக்கப்பட்டதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை; ஈஸா அல் மஸீஹ் மனித கோபத்தில் செயல்படாமல், இறைவனுடைய வீட்டின் மேலுள்ள பரிசுத்த வைராக்கியத்தினால் செயல்படுகிறார் என்றும், உண்மையான ஆராதனையின் ஆவியை மக்களுக்காக திரும்பக் கொண்டுவர முயற்சிக்கிறார் என்றும் அறிந்திருந்தார்கள். ஆனால் அவர் இவ்விதமாகச் செயல்படுவதற்கான காரணங்களையும் அவரை இவ்விதம் செய்யும்படி தூண்டுபவைகள் எவை என்பதையும் அவர்கள் அறிந்துகொள்ள விரும்பினார்கள். ஈஸா அல் மஸீஹ் தங்களுடைய, ஜம்மியதுல் உலமாவின் உதவியை நாடாமல் இறை இல்லத்தைச் சீர்திருத்த முயற்சித்ததால் அவர்களுடைய எதிரியானார்.

 

அவர்கள் இறைவனுடைய அமைதியான பிரசன்னத்தைக் காட்டிலும் பெருந்திரளான மக்களின் இரைச்சலையும் அதனால் வரும் செல்வத்தையுமே விரும்பிய காரணத்தினால், ஈஸா அல் மஸீஹ் அவர்களுடைய மாய்மாலமான தொழுகையை கடிந்துகொண்டார். அவர்களுடைய மேலோட்டமான தொழுகை மற்றும் இறுமாப்பினால் இறை இல்லம் அழிக்கப்படும் என்பதை ஈஸா அல் மஸீஹ் தன்னுடைய முன்னறிவினால் கண்டார். ஒழுங்குபடுத்தப்பட்ட தொழுகை முறைமைகளோ, இப்போது அவை செயல்பாட்டு நிலையில் இருப்பதோ அவர்களை இரட்சிக்காது, இரட்சிக்கும் இறைவனுடைய சத்தியத்தினால் அவர்களுடைய உள்ளத்தில் ஏற்படும் மாற்றமே மெய்யான புதுப்பித்தலை உருவாக்கும்.

 

அவர்களை இரட்சிக்கும் பிரசன்னம் மனுவுருவாகி அவர்கள் நடுவில் நின்றுகொண்டிருக்கிறது. ஈஸா அல் மஸீஹே மெய்யான இறை இல்லம், இறைவன் மஸீஹ்வில் அவர்கள் நடுவில் பிரசன்னமானார். ஈஸா அல் மஸீஹ் அவர்களைப் பார்த்து, இறைவனுக்காக நான் கொண்டிருக்கும் வைராக்கியத்தை எதிர்கொள்ள முடியாத நீங்கள் என்னுடைய சரீரமாகிய இறை இல்லத்தை அழித்துப்போடுங்கள். அழிக்கமுடியாத இந்த சரீரத்தை நீங்கள் அழிப்பீர்கள்; ஆனால் இந்த சரீரத்தை நான் மூன்று நாளில் எழுப்புவேன்; நான் கல்லறையைவிட்டு எழுந்திருப்பேன். நீங்கள் என்னைக் கொல்லுவீர்கள், ஆனால் நான் உயிரோடிருக்கிறேன், ஏனெனில் நானே வாழ்வாயிருக்கிறேன், மாம்சத்தில் வெளிப்பட்ட இறைவனாயிருக்கிறேன் என்று சொல்வதைப்போல உள்ளது. இவ்விதமாக ஈஸா அல் மஸீஹ் தன்னுடைய உயிர்த்தெழுதலைக் குறித்து மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். இந்த உயிர்த்தெழுதல் இன்றைய தேதிவரை அனைத்து அற்புதங்களிலும் மிகப் பெரியதாயிருக்கிறது.

 

பைதுல் முகத்தஸை குறித்த இந்த உவமையை பிரதான ஆலீம்களால் அனுப்பப்பட்டவர்களுக்கு புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் தேவலாயத்தின் பளிங்குக் கற்களையும் வலைவான ஸ்தூபியையும் பார்த்து, 46 வருட காலங்களாக ஏரோதினால் கட்டப்பட்ட இந்த இறைவனுடைய வாசஸ்தலத்தைப் பார்த்து ஈஸா இறைதூஷணம் சொல்லிவிட்டார் என்று நினைத்தார்கள். அவர்கள் கற்களைப் பற்றி பேசினார்கள், ஈஸாவோ தன்னுடைய சரீரத்தைப் பற்றி பேசுகிறார். அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல், அவர் சனகதரின் சங்கத்துக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்படும்போது மீண்டும் எழுப்பப்பட்டு, பொய்சாட்சிகளினால் திரித்துக்கூறப்பட்டது.

 

உண்மையில் மஸீஹ் ஆரம்பித்து வைத்த புதிய ஈமானின் பொருளை தௌராத்தின் மக்கள் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள் என்பது தெளிவு. ஈஸா அல் மஸீஹின் சீஷர்களேகூட அவருடைய மரணமும் உயிர்த்தெழுதலும் நடைபெறும்வரை இந்தப் புதிய வழியில் ஆழமான பொருளை புரிந்துகொள்ளவில்லை. அதன்பிறகுதான் குமாரன் பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டு மீண்டும் உயிர்ததெழுந்தார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

 

இன்று அவர் ஆவிக்குரிய பைதுல் முகத்தஸாக இருக்கிறார். நாம் அந்த இறை இல்லத்தில் ஜீவனுள்ள கற்களாக இணைத்துக் கட்டப்பட்டு வருகிறோம். ஈஸா அல் மஸீஹின் வார்த்தைகளினால் ஒளியூட்டப்பட்ட முன்னைய இறைவாக்குகளைப் புரிந்துகொள்ளும்படி ரூஹுல் குத்தூஸ் சஹாபாக்களுக்கு ஒளியூட்டினார். அவர்கள் உறுதியாக ஈமானில் தரித்துநின்று அவர்கள் ஒன்றிணைந்த இறைவனுடைய பைதுல் முகத்தஸ் ஆனார்கள்.

 

துஆ: 

யா ரப்பே யா ஈஸாவே, நீரே இறைவனுடைய வாசஸ்தலம், பாவிகளும் இறைவனும் சந்திக்கும் இடம். மனந்திரும்புதலையும் தொழுகையையும் நடைமுறைப்படுத்தவும், உம்முடைய நிறைவினால் நிறைந்திருக்கவும் உதவிசெய்வாயாக. அப்போது நாங்கள் அனைவரும் சேர்ந்து ரூஹுல் குத்தூஸின் இறை இல்லமாக ரப்புல் ஆலமீனை சதாகாலமும்  மகிமைப்படுத்துவோம்.

ஆமீன்…

 

One Response to பைதுல் முகத்தஸை சுத்திகரித்தல்

  1. Amberlee says:

    My best friend and I suffered from allergies when we used to live back in our country. Ever since we moved to the US, the allergies kind of went away magyaclli. Is there a reason for that?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *