மறுபிறப்பின் அவசியம் (யோவான் 3:1-13)

யோவான் 3:6-8 

6 மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். 7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம். 8 காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்னஇடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.

ஒவ்வொரு மனிதனிலும் ஏற்பட வேண்டிய அடிப்படையான மாற்றத்தை ஈஸா அல் மஸீஹ் நிக்கோதேமுவுக்குக் காண்பித்தார். இந்த மாற்றம் மாம்சத்திற்கும் ஆவிக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைப் போல மிகவும் பெரிய மாற்றமாகும். இன்ஜீலில் மாம்சம் என்ற வார்த்தை இறைவனைவிட்டுப் பிரிந்துபோன மனிதனுடைய விழுந்துபோன சுபாவத்தையும் அழிவை நோக்கிச் செல்லும் ஒரு துன்மார்க்கனையும் குறிக்கிறது. அந்த வார்த்தை சரீரத்தை மட்டும் குறிக்காமல், கலகம் பண்ணும் மனதையும் ஆவிகளையும் குறிக்கிறது. இது முழுவதும் சீரழிந்த நிலை. ஈஸா அல் மஸீஹ் குறிப்பிட்டதுபோல, இருதயத்திலிருந்து தீய எண்ணங்கள் புறப்பட்டு வருகிறது. எந்த மனிதனும் இறைவனுடைய அர்ஷில் நுழைவதற்குத் தகுதியானவன் அல்ல. மனிதன் பிறப்பிலிருந்தே தீயவனாக இருப்பதால் தீமையின் பிறப்பிடமாகவும் இருக்கிறான்.

 

ரூஹ் என்பது (பரிசுத்த ஆவியானவரைக்) ரூஹுல் குத்தூஸைக் குறிக்கிறது. சத்தியத்தினாலும், தூய்மையினாலும், வல்லமையினாலும், அன்பினாலும் நிறைந்த ரூஹுல் குத்தூஸான இறைவனைக் குறிக்கிறது. றப்புல் ஆலமீன் தீயவர்களை வெறுத்துத் தள்ளாமல், மாம்சம் என்னும் பிரமாணத்தை ஈஸா அல் மஸீஹ்வினால் மேற்கொண்டிருக்கிறார். இது இரண்டாவது பிறப்பின் நோக்கத்தைக் காட்டுகிறது. நம்முடைய அழைப்புக்கேற்ற வாழ்க்கை வாழும்படி நம்மில் இருக்கும் ஆவியானவர் நம்முடைய மாம்சத்தின் இச்சைகளை அழித்துப்போடுகிறார். நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்களா? மாம்சத்தின் கொடுங்கோல் அட்சியிலிருந்து விடு விக்கப்பட்டிருக்கிறீர்களா? என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

 

மூன்றாவது முறையாக ஈஸா அல் மஸீஹ் நிக்கோதேமுவுடன் பொறுமை யாகப் பேசுகிறார். நீயும் உன்னுடைய சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும், இப்றாஹீமுடைய வித்துக்கள் அனைவரும் மறுபடியும் பிறக்க வேண்டும். இது ஒரு கடமை, பரிசுத்த கடமை. ஈஸா அல் மஸீஹ் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று சொன்ன படியால் இது ஒரு கட்டளை என்று நாங்கள் சாட்சியிடுகிறோம். ஒரு அடிப்படையான புதுப்பித்தலின்றி இறைவனை நீங்கள் அறியவும் முடியாது, அவருடைய அரசில் நுழையவும் முடியாது.

 

காற்றடிப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? வீசும் காற்றைப் போலவே மறுபடியும் பிறந்தவர்கள் இருக்கிறார்கள். காற்று வெறுமையிலிருந்து வந்து வெறுமைக்குச் செல்லுகிறது. அதுபோலவே இறைவனுடைய பிள்ளைகளும் மேலிருந்து வந்து, தங்கள் பிதாவாகிய றப்புல் ஆலமீன் இடத்திற்குச் செல்லுகிறார்கள். காற்றின் சத்தத்தை வைத்தே அங்கு காற்றிருக்கிறது என்று நாம் அறிந்து கொள்ளுகிறோம்.

 

மறுபடியும் பிறந்தவர்களுடைய வாழ்க்கை மூலமாகப் பரிசுத்த ஆவியானவர் (ரூஹுல் குத்தூஸ்) பேசுவதே அவர்களுடைய மறுபிறப்பிற்கான தெளிவான அடையாளமாயிருக்கிறது. சாதாரண மனிதர்களுடைய சிந்தையிலிருந்து வருகிற இயற்கையான காரியங்களை நாம் பேசுவதில்லை. ஒரு முஃமினில் இறைவனுடைய வல்லமையின் சத்தம் வருவதுபோல, இவ்வுலகத்திற்கு வெளியிலிருந்து பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் வருகிறார். அவர் உம்முடைய இருதயத்தில் இறங்கியிருக்கிறாரா?

 

யோவான் 3:9-13
9 அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். 10 இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா? 11 மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக் குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. 12 பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? 13 பரலோகத்திலிருந்திறங்கின வரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.

 

ஈஸா அல் மஸீஹ் தந்த விளக்கத்தில் நிக்கோதேமு (ரூஹுல் குத்தூஸின்) பரிசுத்த ஆவியின் தேவையை உணர்ந்து கொண்டார். அந்த தெய்வீக காரியத்தின் கவர்ச்சிக்கு அவருடைய இருதயம் மறுவினையாற்றத் தொடங் கியது. ஆனால் இந்த சத்தியத்தின் ஆழத்தை அறிந்துகொள்ள முடியாதபடி அவருடைய மனம் தடுமாறியது. இந்தக் காரியங்கள் எப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லையே என்று ஆதங்கப்பட்டார்.  அது அவருடைய இயலாமையை ஒத்துக்கொள்ளும் அறிக்கையாகும். ஈஸா அல் மஸீஹ் அவருக்குத் தொடர்ந்து வழிகாட்டினார். ஆம், மற்றவர்கள் என்னிடம் வந்து பேசத்தயங்குகிறார்கள். அது அவர்களுடைய அறிவுக்கும் அந்தஸ்துக்கும் இழுக்கு என்று நினைக்கிறார்கள். நீர் என்னிடத்தில் வந்து பேசுவது கன்னியத்துக்குறிய ஆலிமான உமக்கு பெரிய காரியம்தான். ஆனால் உமக்குப் ரூஹுல் குத்தூஸின் நோக்கங்கள் தெளிவாக விளங்கவில்லை. உங்கள் இபாதத்துக்கள், அமல்கள், ஷரீஆவை  கைக்கொள்வதற்கான உங்கள் முயற்சிகள் அனைத்தும் வீணானவைகள். இறைவனுடைய அர்ஷின் எளிய விதிமுறைகள்கூட உங்களுக்குத் தெரியவில்லை.

 

மூன்றாவது முறை, மெய்யாகவே, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்று முக்கியமான வாக்கியத்தைக் கூறுகிறார். இவ்வாறு அவர் சொல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய வஹியை அவர் அறிவிக்கிறார். மனிதர்களாகிய நம்முடைய மனங்கள் புரிந்துகொள்வதில் அத்தனை மந்தமுள்ளவையாயிருப்பதினால் இவ்வாறு அவர் கூறுகிறார்.

 

நிக்கோதேமு கற்றுக்கொள்ளும் புதிய பாடம் என்ன? ஈஸா அல் மஸீஹ் நான் என்ற ஒருமையிலிருந்து நாம் என்ற பன்மைக்குச் செல்லுகிறார். அவர் இப்போது நம்முடன் இணைந்து பரிசுத்த ஆவியானவருக்குச் செவிகொடுக்கிறார். ஈஸா அல் மஸீஹும் இறைவனும் ஒன்றாயிருக்கிறார்கள். அவரே மனுவுருவான இறைவனின் வார்த்தை (கலிமதுல்லாஹ்). எல்லாராலும் புரிந்துகொள்ள முடியாத உண்மையை ஈஸா அல் மஸீஹ் கற்றுக்கொடுக்கிறார். அவர் ரூஹுல் குத்தூஸுடன் உள்ள ஐக்கியத்தில் தான் கவனித்த காரியங்களுக்குச் சாட்சி கொடுக்கிறார். இந்த சாட்சியை நாம் ஏற்றுக்கொண்டு ஈமான் கொள்கிறோம்.

 

மற்ற அனைத்து மனிதர்களையும்விட அவர் நன்கு அறிந்துள்ள இந்தக் காரியம் என்ன? அவர் இறைவனை அறிந்தவராக அவரை பிதாவே என்று அழைத்தார். ரூஹுல் குத்தூஸுடைய உதவி யின்றி இந்த ஆலிமுடைய தப்பெண்ணமுள்ள மனதில் இந்த இரகசியம் ஒருபோதும் செல்லாது. ஈஸா அல் மஸீஹ் றப்புல் ஆலமீனான பிதாவினிடத்திலிருந்து வந்தவரும் அவரிடம் திரும்பச் செல்லுகிறவருமாயிருக்கிறார். அவர் அர்ஷிலிருந்து இறங்கினவரும் அர்ஷுக்கே மீண்டும் ஏறினவருமாயிருக்கிறார். இறைவனுடைய ஆவியானவர் ஈஸா அல் மஸீஹ்வில் மாம்சமானபோது இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான தடை அகற்றப்பட்டது. நித்தியம் என்பது தூரமானதும் பயங்கரமானதுமல்ல, சமீபமானதும் மென்மையானதுமாகிவிட்டது. இறைவனுடைய இந்த சத்தியத்தின் சாட்சியை மனிதர்கள் புரிந்துகொள்ளாதிருப்பது ஆச்சரியமானது. அவர்கள் ஈமான் கொள்ள மறுப்பதாலும், தங்களுடைய பாவங்களை அறிக்கை செய்ய தவறுவதாலும், பிதாவினாலும் ஆவியினாலும் பிறந்த ஒருவரை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய மறுபிறப்பின் தேவையை உணராமல் தாங்கள் நல்லவர்கள் என்றும் புத்திமான்கள் என்று நினைத்துக்கொண்டு தங்களையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சுய திருப்தி பரிசுத்த திரித்துவத்தின் ஒருமையை அறிய அவர்களை வழிநடத்தாது.

 

துஆ:

பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரே நாங்கள் உம்மை தொழுதுகொள்கிறோம். உம்முடைய அன்பின் நிச்சயத்தினால் நீர் எங்களைப் புதுப்பித்து உம்முடைய சத்தியத்தின் பிள்ளைகளாக்கியிருக்கிறீர். உம்முடைய சத்தியமும் ஆவியானவரும் எங்களுடைய தேசத்தின் மீது வீசட்டும். பல மனிதர்கள் இரட்சிக்கப்படட்டும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரைக் குறித்த ஷஹாதா எங்கும் பரவட்டும். அது உள்ளூர் மொழியில் எல்லாருக்கும் தெளிவாகி பலர் மறுபடியும் பிறக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *