ரப்புல் ஆலமீன் எவ்வாறு சாதாரண மனிதராயிருக்க முடியும்?

யோவான் 1:25-28 


25 அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங்கொடுக்கிறீர் என்று கேட்டார்கள். 26 யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். 27 அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான். 28 இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன.

 

யஹுதிகள் தவ்ராத்திலிருந்து வுழுசெய்தல், மேனியைக் கழுவுதல் மற்றும் ஒரு வகையான குளியல் ஆகியவற்றைக் கற்றிருந்தார்கள். மேனியைக் கழுவும் சடங்கு ஒழுக்க ரீதியாக ஏற்பட்ட அசுத்தத்தை நீக்குவதாகும். ஆனால் ஞானஸ்நானம் என்பது யஹுதியல்லாதவரை சுத்திகரிப்பதாகும். யூதரல்லா தவர்கள் தூய்மையற்றவர்கள் என்றே அவர்கள் கருதினார்கள். எப்படியிருந்தாலும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வது தாழ்மைக்கும் இறைவனுடைய சமுதாயத்தில் சேர்ந்து கொள்ளுவதற்கும் அடையாளமாகும்.

 

ஜெருசலேமிலிருந்து வந்தவர்கள் குழப்பமடைய காரணம் என்ன?

விருத்தசேதனம் (சுன்னத்து) செய்யப்பட்டு முழுவதும் உடன்படிக்கையில் நிலைநிறுத்தப்பட்ட முஃமீன்களை நீ ஏன் மனந்திரும்பும்படி அழைக்கிறாய்? நம்முடைய இனத்தின் பொறுப்புள்ள இமாம்களான எங்களை, பரிசுத்தக் குலைச்சலுள்ளவர்களும் இறைவனுடைய கோபத்திற் குரியவர்களும் என்று நீ கூறுகிறாயா?  என்ற குழப்பம் யஹுதிய இமாம்களுக்கு உருவானது. யஹ்யா நபியுடைய ஞானஸ்நானம் பக்தியுள்ள யஹுதிகளுக்குகூட இடறலாயிருந்தது. அது அவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்ததுவிட்டது. முதலாவது குழு தங்களை மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தினால் சுத்திகரித்துக்கொண்டார்கள். அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்ட மக்களாக மஸீஹ்வை சந்திக்க ஆயத்தமாயிருந்தார்கள். இரண்டாவது குழு தாங்கள் ஏற்கனவே மஸீஹ்வை வரவேற்க ஆயத்தமானவர்கள் என்று கருதி ஞானஸ்நானத்தைப் புறக்கணித்தார்கள். அவர்கள் மஸீஹ்வின் வருகை, அரசியல் அல்லது ஷரீஆ ரீதியான காரணங்களுக்காக அமையும் என்று கருதினார்கள்.

 

அதிகாரிகள் யஹ்யா நபியை சோதித்த இந்தச் சம்பவம் நடைபெறும்போது ஒருவேளை அவரும் அங்கிருந் திருக்கலாம். அவர்களுக்கிடையில் நடைபெற்ற இந்த உரையாடல் அவரை ஆழமாகத் தொட்டது. குறிப்பாக யஹ்யா நபி தான் மஸீஹ்வும் அல்ல, எலியாவுமல்ல, வாக்குப்பண்ணப்பட்ட நபியுமல்ல என்ற அறிக்கைக்குக் காரணமாயிருந்த அவர்களுடைய கேள்விகள் அவரை ஆழமாகத் தொட்டிருக்க வேண்டும். இந்தக் கேள்விகள் மூலமாக நபி யஹ்யாவை ஒரு முக்கியமற்ற நபர் என்று அவர்கள் அவரை அவமானப்படுத்தினார்கள்.

 

அதற்கு என்ன பதில் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்திருந்த நபி யஹ்யா புன்முறுவலுடன், ஆம். நீங்கள் சொல்வது சரிதான். நான் ஒரு முக்கியமான நபரில்லை. நான் எந்த அதிசயமோ அற்புதமோ இன்றி தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். நான் செய்வதெல்லாம் எனக்குப் பின் வருபவரைக் சுட்டிக்காட்டும் அடையாளமே தவிர வேறில்லை என்றார்.

 

அதன்பிறகு, ஒட்டக உடை தரித்திருந்த யஹ்யா நபி எழுந்து நின்று, பலத்த சத்தமாக, ஜெருசலேமிலிருந்து வந்திருந்தவர்களையும், மக்கள் சமுதாயத்தையும் பார்த்து, நீங்கள் குருடர்கள். உங்கள் நடுவில் நடைபெறும் ஒரு வரலாற்று நிகழ்வை கவனிக்கத் தவறுகிறீர்கள். ஒரு சாதாரண மனிதனாகிய என்னை நீங்கள் ஆராய்ந்து பார்க்கிறீர்கள். ஆனால் மஸீஹ் வந்திருக்கிறார். அவரைப் பாருங்கள். மனந்திரும்பினவர்களின் கூட்டத்தின் நடுவில் அவர் இருக்கிறார். யஹ்யாவாகிய எனக்கு எதையும் செய்யும் வல்லமையில்லை. நான் செய்ய வேண்டிய சேவை எல்லாம் ஒன்றுதான். நான் ஒரு சத்தமாக மட்டும் இருக்கிறேன். இப்பொழுது வந்திருக்கிற மஸீஹ்வைப்பற்றி பரிசுத்த ஆவியானவர் எனக்குச் சொல்லியிருக்கிறார். அவர் இங்கே இருக்கிறார். இதுவே இரட்சிப்பின் நாள். சீக்கிரமாக மனந்திரும்புங்கள், ஏனென்றால் இறுதிக்காலம் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது என்றார்.

 

இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் கூட்டம் திடுக்கிட்டது. அவர்கள் மஸீஹ்வை வரவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் அங்கு கூடிவந்திருந்தார்கள். ஆனால் மஸீஹ் ஏற்கனவே வந்துவிட்டார். அவர்கள் அவரைக் காணவும் இல்லை. அவருடைய வருகையை அறியவுமில்லை. அவர்கள் முற்றிலும் ஆச்சரிய மடைந்தவர்களாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

 

மஸீஹ்வைக் குறித்த தனது புகழ்பெற்ற விளக்கத்தை யஹ்யா நபி அறிவித்தார். இது அவர் ஏற்கனவே 15ம் வசனத்தில் கூறியிருந்த, எனக்குப் பின் வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர் என்பதைக் காட்டிலும் வெளிப்படையான கூற்றாகும். இதன் மூலமாக நபி யஹ்யா மஸீஹ்வின் நித்தியத்தை மட்டுமல்ல, மனிதர்கள் நடுவில் அவர் இருக்கிறார் என்பதையும் குறிப்பிடுகிறார். மஸீஹ் வெளிப்பிரகாரமாக சாதாரண மனிதரைப் போல தான் காணப்பட்டார் என்றும் மற்றவர்களைவிட அவரை வேறுபடுத்திக் காட்டும் ஒளிவட்டத்தையோ, வித்தியாசமான உடையலங்காரத்தையோ, ஒளிவீசும் கண்களையோ அவர் பெற்றிருக்கவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். அவர் மற்ற எல்லாரைப் போலவும் சாதாரணமாகவே காணப்பட்டார். எந்தவகையிலும் வித்தியாசமாயிருக்கவில்லை. ஆனால் அவருடைய உண்மையான தன்மையில் அவர் எல்லாரையும்விட வித்தியாசமானவர்: அவர் காலங்களுக்கு முற்பட்டவர், பரலோகத்துக்குரிய இறைத்துவமுள்ளவர். ஆனால் அவர்கள் நடுவில் எளிமையான மனிதனாக நின்றுகொண்டிருந்தார்.

 

மஸீஹ்வின் சேவகனாக இருப்பதற்குத் தான் தகுதியற்றவன் என்பதை ஸ்நானகன் குறிப்பிடுகிறார். அந்நாட்களின் வழக்கத்தின்படி வீட்டிற்கு ஒரு விருந்தாளி வரும்போது, ஒரு வேலைக்காரன் அவருடைய காலைக் கழுவுவான். ஈஸா அல் மஸீஹ் மக்கள் கூட்டத்தின் நடுவிலிருந்து தன்னிடம் ஞானஸ்நானம் பெற வருவதைப் பார்த்த யஹ்யா நபி, அவருடைய காலைக் கழுவுவதற்கு அவருடைய பாதணிகளைக் கழற்றுவதற்குக் கூட எனக்குத் தகுதியில்லை என்று கூறுகிறார். இந்த வார்த்தைகள் மக்கள் கூட்டத்தைக் கலக்கியது. இங்கே நின்று கொண்டிருக்கும் இந்த அந்நியன் யார்? ரப்புல் ஆலமீன் எவ்வாறு சாதாரண மனிதராயிருக்க முடியும்? பெரிய நபியாகிய யஹ்யா இவருடைய பாதணிகளின் வாரை அவிழ்க்கவும் நான் பாத்திரனல்ல என்று ஏன் சொல்ல வேண்டும்? என்று ஒருவரையொருவர் பார்த்துக் கேட்டார்கள். ஒருவேளை ஜெருசலேமிலிருந்து வந்தவர்கள் யஹ்யா நபியை திட்டி, இவன் ஒரு இழிவான ஏமாற்றுக்காரன் என்று சொல்லிச் சென்றிருக்கலாம். யஹ்யா நபியுடைய சஹாபாக்கள் சிலர் அவர்களைப் போலவே, மஸீஹ் தலைநகரமாகிய ஜெருசலேமில் மேன்மையுடன் வருவாரே தவிர, வனாந்தரத்தில் எளிமையானவராக வரமாட்டார் என்று சொல்லிச் சென்றிருக்கலாம். இவ்வாறு அவர்கள் இறைவனுடைய மஸீஹ்வைச் சந்திக்கும் ஒப்பற்ற வாய்ப்பை இழந்தார்கள்.

 

இந்த நிகழ்வுகள் யோர்தானுடைய கிழக்குக் கரைப்பகுதியில் நடைபெற்றது. அது சனகதரின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியல்ல, ஏரோது அந்திப்பாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதி. ஆகவே அவர்கள் யஹ்யா நபியைக் கைதுசெய்து ஜெருசலேமிற்குக் கொண்டுபோய் நியாயம்தீர்க்க முடியாமல் போயிற்று.

 

துஆ

ரப்புல் ஆலமீன் ஈஸா அல் மஸீஹ் மெய்யான மனிதனாககும்  நித்தியமான இறைவனாகவும் எங்களிடத்தில் வந்தமைக்காக நன்றி செலுத்துகிறோம். நீர் எங்களுக்கு நெருக்கமாக வந்த காரணத்தினால் நாங்கள் உம்மை தொழுது கனப்படுத்துகிறோம். சரீரப்பிரகாரமாக நீர் உம்மைத் தாழ்த்தினீர், அதனால்தான் யஹ்யாவைத் தவிர உம்மை யாராலும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. நீர் இருதயத்தில் தாழ்மையும் சாந்தமும் உடையவராயிருக்கிறீர். நாங்களும் உம்மைப் போல தாழ்மையுடனிருக்கவும் உம்முடைய ரூஹுல் குத்தூசின்வழிநடத்துதலினால் உம்மைப் பின்பற்றவும் எங்களுக்குப் போதியும்.

கேள்வி:

  1. சனகதரின் சங்கத்திலிருந்து அனுப்பப்பட்டவர்களுக்கு முன்பாக யஹ்யா நபி ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்கு பகர்ந்த சாட்சியின் உச்சகட்டம் என்ன?

 

 

One Response to ரப்புல் ஆலமீன் எவ்வாறு சாதாரண மனிதராயிருக்க முடியும்?

  1. Su says:

    like to know more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *