இறைவனின் முகத்தைத் தேடுகிறீர்களா? அல்லது கரங்களை மட்டும் பார்க்கின்றீர்களா?

நாளாகமம் 7 14

“நாடு இப்படியே போச்சினா நம்ம பசங்கள்ட எதிர்காலம் என்னாவது!”

“இந்த நாட்டுல தொடர்ந்து வாழ்ந்தா நம்ம குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். US போற வழிய தேடணும்”

இப்படியான கருத்துக்கள் எமது சமுதாயத்தில் அடிக்கடி கேட்கக் கூடியதாகவுள்ளது. எதற்கு எடுத்தாலும் நாட்டையும் நாட்டை ஆள்கிறவர்களையும் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இப்படி குறை சொல்லி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த பலர், கலாச்சாரப் பிரச்சினைகளால் பிள்ளைகளை அங்கேயே விட்டுவிட்டு நாடு திரும்பியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடம் “ஏன் திரும்ப வந்துவிட்டீகள் என்று கேட்டால், “அந்த கலாச்சாரம் நமக்கு ஒத்துவராது, என் பையனையே எனக்கு திட்ட முடியல, உடனேயே அவன் பொலிஸுக்கு போன் செய்கிறான் என்று குழந்தைகள் தங்கள் கட்டுப்பாட்டை மீறிவிட்ட வேதனையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு சில பிரச்சினைகளிலிருந்து விடுபட, நான் வெளிநாடு போக முயற்சித்தேன். அப்பொழுது ஒரு தங்கை கூறினாள், “பிரச்சினை உங்களுக்குள் இருந்தால் அது எங்கு சென்றாலும் உங்களுடன் வரும் என்று. அந்த வார்த்தைகள் என்னை சிந்திக்கவைத்தது. எனது வெளிநாட்டு பயண எண்ணத்தை கைவிட்டேன். தொடர்ந்து போராடி இறை அருளால் அந்த பிரச்சினைகளிலிருந்து வெளியேறினேன்.

நாடு சீரழிந்துள்ளது என்று வேதனையில் இருக்கும் இறைவனுடைய பிள்ளைகளுக்கு இறைவன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். 2நாளாகமம் 7:14ம் வசனத்தில் இறைவன் இப்படிச் சொல்கிறார்.

என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.

இந்த வசனத்தில் நாடு சுகமடைய நான்கு காரியங்கள் கூறப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

  1. தங்களை தாழ்த்தவேண்டும்
  2. துஆ செய்ய வேண்டும்
  3. இறைவனுடைய முகத்தை தேடவேண்டும்
  4. பொல்லாத வழிகளை விட்டு விலக வேண்டும்

 

தாழ்த்துவது என்பது இறைவனுடைய பிள்ளைகளுக்கு நன்றாக தெரிந்திருக்கவேண்டிய ஒரு விடயமாகும். ஏனெனில் துன்யாவைப் படைத்த இறைவன் தன்னைத்தானே தாழ்த்தி மனித உருவில் வந்தார் என்பதை ஈமான் கொள்வதாலேயே இறைவனுடைய பிள்ளைகளாகிறோம்.

இறைவனுடைய பிள்ளையாக இருந்தால் நிச்சயமாக துஆ செய்கிறவனாகதான் இருப்பான். எப்படி துஆ செய்வது என்பதை பற்றி அநேக பயான்கள் கேட்டிருப்போம், அனேக கட்டுரைகள் வாசித்திருப்போம்.

எமது பொல்லாத வழிகளிலிருந்து எம்மை காப்பாற்றவே ஈஸா அல் மஸீஹ் சிலுவையில் குர்பான் ஆனார் என்பதை ஈமான் கொண்டு, தெளிவாக புரிந்து வைத்திருக்கிறோம்.

அப்படியானால் இறைவனுடைய முகத்தை தேடுவது என்றால் என்ன? என்பதைக் குறித்து இனி சற்று சிந்திப்போம்.

நாங்கள் சிறு வயதாக இருக்கும்போது, அப்பா வீட்டுக்கு வரும் போது அவருடைய முகத்தை பார்ப்போமா? அவருடைய கரத்தை பார்ப்போமா? பொதுவாக அவர் என்ன கொண்டுவந்திருக்கிறார் என்று அவருடைய கரங்களைதான் பார்ப்போம். தற்செயலாக அவருடைய முகத்தை பார்த்திருந்தால் அவர் சோர்வாக இருக்கிறாரா? துயரத்தில் இருக்கிறாரா? சந்தோஷத்தில் இருக்கிறாரா? என்பதையெல்லாம் அறிந்துகொள்ள முடியும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கமைய மனதிலுள்ள வேதனைகளை அநேகமாக முகம் காட்டிக் கொடுத்துவிடும்.

அதை போன்று நாம் இறைவனிடம் எங்கள் தேவைகளை துஆவாக கேட்டுவிட்டு, அவரின் முகத்தை பார்க்கிறோமா? அல்லது கரத்தை பார்க்கிறோமா? எமது விண்ணப்பத்திற்கு பதில் கிடைக்குமா என்று அவரின் கரத்தைதான் பார்க்கிறோம். அவருடைய முகத்தை பார்ப்போமேயானால் அவருடைய சித்தம் என்ன, விரும்பம் என்ன என்பதை அறிந்துகொண்டு, அதன்படி வாழ்வோம். நம் தேசமும் குணமடைந்திருக்கும்.

நாம் ஒரு பொருளை தேடவேண்டும் என்றால் அது எம்மைவிட்டு மறைந்திருக்கவேண்டும். இறைவனுடைய முகத்தை தேடவேண்டும் என்றால் இறைவனுடைய முகம் எம்மைவிட்டும் மறைந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். அப்படி இறைவனுடைய முகம் எம்மைவிட்டும் மறைந்திருக்கும் மூன்று தருணங்களை ஆராய்வோம்.

இறைவனுடைய முகம் நாம் பாவம் செய்யும் போது நமக்குத் தெரியாது.

ஆதி மனிதன் ஆதம் (அலை) அவர்களும் அவர்கள் மனைவியும் நாள்தோறும் இறைவனுடன் உறவாடிக்கொண்டிருந்தார்கள். ஒருநாள் இறைவன் அவர்களை சந்திக்க வந்தபொழுது, அவர்களை காணவில்லை, அவர்கள் இறைவனின் முகத்தைவிட்டு தங்களை மறைத்துக் கொண்டிருந்தார்கள். காரணம் அவர்கள் இறைவனுக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்திருந்தார்கள்.

வழமையாக அப்பா வீட்டுக்கு வரும்போது ஓடிவந்து கட்டித்தழுவும் குழந்தை ஒருநாள் அப்பா வீடு வரும்போது ஒளிந்துக்கொண்டால் அப்பா புரிந்துகொள்வார் என்ன நடந்திருக்கும் என்று. ஏதோ ஒரு தவறு செய்துவிட்டதால் பயந்துகொண்டு வராமல் இருக்கிறது அந்தக் குழந்தை. தகப்பனின் முகத்தை பார்க்க முடியாமல் இருக்கிறது. இதுபோல்தான் இறைவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போகும்போது நாம் இறைவனுடைய முகத்தை பாக்க வெட்கப்படுகிறோம்.

நாம் செய்த செய்யப்போகிற அனைத்து பாவங்களும் ஒரே தரம் ஈஸா அல் மஸீஹ் சிலுவையில் குர்பானார் என்பதை நாம் மறந்து குற்ற உணர்வில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதனால் இறைவனின் முகத்தை காண முடியாதவாறு எங்களை நாமே மறைத்துக்கொண்டிருக்கிறோம்.

 

இறைவன் தன் முகத்தை மறைத்துக்கொண்ட சந்தர்ப்பம்

பாவிகளை நேசிக்கும் இறைவன் பாவத்தை வெறுக்கிறார். தனது நேச குமாரன் ஈஸா அல்  மஸீஹ் முழு துன்யாவின் பாவத்தையும் சுமந்து முழு பாவமாக சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் போது, பிதா தன் முகத்தை திருப்பிக்கொண்டார். இது மிகவும் கொடுமையான ஒரு நிலைமையாகும்.

நம்மில் பலர் துணி துவைப்பது போல்தான் பாவ மன்னிப்பு பெருகின்றனர். அணியும் உடைகளை ஒன்றுசேர்த்து வார இறுதியில் துவைப்பது போல் செய்யும் பாவங்களையும் ஒன்று சேர்த்து ஞாயிறு தொழுகையில் கழுவி சுத்திகரிக்கப் பார்க்கிறார்கள். இப்படி நாம் பாவங்களால் நிரம்பி இருக்கையில், இறைவன் தன் முகத்தை நம்மைவிட்டும் திருப்பிக்கொள்கிறான்.

 

இறைவனின் முகத்தை பார்க்க முடியாதவாறு ஒரு சுவர் எழும்பியிருக்கிறது.

அந்த சுவர் உலக பாவங்களால் உண்டானதாகும். சாட்டுப்போக்கு சொல்லும் மக்கள் இப்படிச் சொல்வார்கள் “ இறைவன் குத்தூஸ் ஆனவர் (அதி பரிசுத்தர்) பாவியான மனிதனுக்கு இறைவனைக் காண முடியவே முடியாது. நாங்கள் நல்ல அமல்கள் செய்தால் ஒருவேளை சுவனபதியை அடைந்து இறைவனைக் காணலாம்”.

இறைவன் மனிதனை படைத்த நோக்கமே அவனுடன் உறவை வைத்துக் கொள்வதற்குதான். இறைவனுடனான உண்மையான உறவைதான் தொழுகை என்று சொல்வது. ஆனால் பாவம் எனும் சுவர் இறைவனுடன் உறவை பேண முடியாதவாறு தடையாகவுள்ளது. இந்த சுவரை உடைத்து பாவத்தில் வாழும் மக்களுக்கு இறைவனின் முகத்தை பார்க்கும் பாக்கியத்தை ஏற்படுத்தும் பொறுப்பு இறைவனுடைய பிள்ளைகளாகிய நமக்குரியதாகும். அந்த பொறுப்பை நாம் சரிவர நிறைவேற்றாவிட்டால் பாவத்தில் வாழும் மக்கள் இறைவனின் முகத்தை காணமாட்டார்கள். அப்படி அவர்கள் காணவில்லையென்றால் நாடு குணமடைய மாட்டாது. தேசம் குணமடையாவிட்டால் நாம் புலம்பிக்கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

இறைவனின் முகத்தை பற்றி அதிகமாக ஸபூர் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் தாவூது நபி “(சங்கீதம் 13:1 ) எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? என்று துஆ செய்வதைப் பார்க்கலாம். நாமும், நமது தேசமும் சுகமடைய வேண்டுமென்றால் முதலாவது  குற்ற உணர்விலிருந்து விடுதலை பெறுவோம். பாவம் செய்யாமல் இருக்க முயற்சிப்போம். இரண்டாவது  நாள்தோறும் குளிப்பது போல் நாள்தோறும் பாவ மன்னிப்பு கேட்போம். அசுத்தத்தை போக்கி, எம்மை சுத்தம் செய்து கொள்வோம். மூன்றாவதாக, பாவத்தில் வாழும் ஜனங்களுக்கு இறைவனின் முகத்தை காணும் வழியான ஈஸா அல் மஸீஹ்வை அறிமுகம் செய்வோம். பாவம் என்கிற சுவரை உடைப்போம்.

 

இறுதியாக, நாமும் நம்முடைய தேசமும் குணமடைய நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியமானது, இறைவனை தொழும் போது, அவருடைய கரத்தை மாத்திரம் பார்க்காமல், அவருடைய அன்பு முகத்தையும் பார்க்க முயற்சிப்போம். அவரது முகத்தை பார்க்கும்படி நம்மை தாழ்த்தி, துஆ செய்து, தவறான வழிகளிலிருந்து நம்மை விலக்கி காத்துக் கொள்வோம். இறைவன் நம்மை எப்போதும் காண்கிறார் என்ற ஈமானுடன் அவரது முகத்த தேடுவோமாக!

One Response to இறைவனின் முகத்தைத் தேடுகிறீர்களா? அல்லது கரங்களை மட்டும் பார்க்கின்றீர்களா?

  1. Lynn says:

    I hear you about paying the bills, but there are other ways to do that. You are a great writer with a perspective and pa8#2on&ssi30; maybe dust off your book idea? If you do write a book, try to get it published, the old-fashioned way.

Leave a Reply to Lynn Cancel reply

Your email address will not be published. Required fields are marked *