என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?

ஈஸா அல் மஸீஹ் கலிமதுல்லாஹ் என்றால், அவர் இறைவன் என்றால், “என் இறைவா! ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று அவர் ஏன் மன்றாடினார் என்பது எம்மில் பலரும் கேட்கின்ற ஒரு கேள்வி. இதனை ஆதாரம் காட்டி, புத்திஜீவிகள் என்று காட்டிக்கொள்ளும் பலர் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாத ஒருவராயிருக்கையில், எப்படி மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரையே குர்பானாக கொடுத்தார் என்று தங்களை கேள்வி கேட்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அல் கிதாப் எனும் இறைவேதம் வருடந்தோறும் மாற்றப்படுகிறது என்று பொய்க்குற்றச்சாட்டை முன்வைக்கும் அதே அறிஞர்கள், அல் கிதாபின் சத்திய போதனைகளுக்கு, என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற வசனம் அச்சுறுத்தலாக இருந்தால், ஏன் இன்னும் அதனை மாற்றாமல் அப்படியே வைத்துள்ளார்கள் என்று கொஞ்சமாவது சிந்தித்திருந்தால், அவர்களின் இரு குற்றச்சாட்டுக்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறதே என்று தங்களைக் குறித்துத் தாங்களே வெட்கப்பட்டிருப்பார்கள்.

கலிமதுல்லாஹ்வாகிய ஈஸா அல் மஸீஹ், துன்யாவின் பாவத்திற்காக சிலுவையில் குர்பானானபோது, “என் இறைவா! என் இறைவா! ஏன் என்னை கைவிட்டாய்? என்று ஏன் சொன்னார் என்பதை அல் கிதாப் எனும் இறைவேதத்தின் ஓளியில் பதிலைத் தேடுவதே, தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்ய சரியான முறை என்பதை அறிந்துகொள்வது நலம்.

 

நீங்கள் ஒரு ஆய்வுக்கட்டுரையை வாசிக்கிறீர்கள். அதில் ஏதும் சந்தேகம் ஏற்பட்டால் உடனேயே என்ன செய்வீர்கள்? உங்கள் சொந்த யூகத்திற்கு செவிகொடுப்பீர்களா? அல்லது, அதன் உசாதுணை நூல்களை நாடுவீர்களா? நீங்கள் சிறந்த ஆய்வாளராயின் உசாதுணை நூல்களை நாடுவீர்கள். அந்த உசாதுணை நூல்கள் நிச்சயமாக அந்த ஆய்வுக்கட்டுரைக்கு முந்தியவையாக இருக்கும் என்பதை மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

அதுபோலவே அல் கிதாபின் இன்ஜீலில் உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டால் உடனேயே அதன் உசாதுணை நூல்களான ஸபூர், தௌராத் மற்றும் நபிமார்களின் சுஹுபுக்களுக்கு போய் பார்க்கவேண்டும். அதனை ஈஸா அல் மஸீஹ் இப்படி கூறுகிறார்:

 

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.” (மத்தேயு 5:17)

 

இப்பொழுது முழு துன்யாவின் பாவத்திற்காகவும் சிலுவையில் குர்பானான ஈஸா அல் மஸீஹின் சிலுவைக் குர்பானில் நிறைவேறிய முன் அறிவிப்புக்களை ஆதாரத்துடன் பார்த்து, தெளிவு பெறுவோம்.

 

ஸபூர் வேத முன்னறிவிப்பு :

“என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.” (சங்கிதம் 22:16).

முன்னறிவிப்பு நிறைவேறுதல் இன்ஜீலில்:

“நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.” (லூக்கா 24:20)

 

ஸபூர் வேத முன்னறிவிப்பு :

என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.” (சங்கிதம் 22:18)

 

முன்னறிவிப்பு நிறைவேறிய ஆதாரம் – இன்ஜீலில்:

(யோவான் 19:24).(மத்தேயு 27:35) (மாற்க் 15-24)

“அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.” (மத்தேயு 27:35)

ஸபூர் வேத முன்னறிவிப்பு :

 

என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” (சங்கிதம் 22:1)

முன்னறிவிப்பு நிறைவேறிய ஆதாரம் – இன்ஜீலில்:

“என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.” (மத்தேயு 27:46)

ஈஸா அல் மஸீஹ் தன்னைக் காப்பாற்றுவதற்காக அப்படிச் சொல்லவில்லை. முன்னறிவிப்பு நிறைவேற வேண்டும் என்பதற்காகவே அப்படி சொன்னார். மேலும் ஈஸா அல் மஸீஹ்:

அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.” (லூக்கா 24:44).

 

அல் கிதாப் எனும் இறைவனுடைய வார்த்தைகளை ஆராய்ந்து படிப்பது, ஒவ்வொரு மனிதன் மீதும் விழுந்த கட்டாய கடமையாகும். அந்தக் கடமையை முறையான விதத்தில் செயற்படுத்தினால் சரியான பலனை அனுபவிக்கமுடியும். குறுக்கு வழிகளையும் குருடர்களையும் பின்பற்றினால் நிரந்தர நரகத்தில்தான் உங்கள் இருப்பிடத்தை ஆயத்தப்படுத்திக்கொள்ள முடியும்.

சிந்தியுங்கள்! செயற்படுங்கள்! நேர்வழியைக் காட்டுமாறு ஏக இறைவனிடம் துஆச் செய்யுங்கள்!

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *