குமாரனைக் காண்கிறவன் பிதாவைக் காண்கிறான்

3. கலிமா மனுவுருவானதன் மூலம் இறைவனுடைய முழுமையும் உலகத்தில் தோன்றியது   (யோவான் 1:14-18)


யோவான் 1:14 


14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

 

யார் இந்த ஈஸா அல் மஸீஹ். அவரே மெய்யான இறைவனாக இருக்கிறார். இந்த மாபெரும் இரகசியமே இன்ஜீல் யோவானின் அடிப்படை நோக்கமாகும். இறைவனுடைய வார்த்தையின் மனுவுருவாதலைப் பற்றிப் பேசும்போது, இதற்குப் பின் வருகின்ற செய்திகள் அனைத்துக்குமே இந்தப் 14ம் வசனம்தான் திறவுகோலாகயிருக்கிறது. நீங்கள் இந்த ஆவிக்குரிய இரகசியத்தின் முழுமையான பொருளைப் புரிந்துகொண்டுவிட்டால், இனிவரும் அதிகாரங்களைக் குறித்த அறிவின் ஆழத்தை அடைவீர்கள்.

மஸீஹின் மனுவுருவாதல் நம்முடைய ஆவிக்குரிய புதுப்பித்தலிலிருந்து அடிப்படையில் வேறுபடுகிறது. நாம் அனைவரும் ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் பிறந்தவர்களாகவும் ஒரு சரீரத்தை உடையவர்களாகவும் இருக்கிறோம். அதன்பிறகு நற்செய்தியின் வார்த்தை நம்மை வந்தடைந்து, நம்மில் நித்திய வாழ்வை உண்டுபண்ணியது. ஆனால் ஈஸா அல் மஸீஹ்வோ உலகத்திலுள்ள ஒரு தகப்பனால் பிறக்கவில்லை. இறைவனுடைய வார்த்தை (கலிமா) மலக்கு (தேவதூதன்) மூலமாக மரியமுக்கு வந்தது. அந்த மலக்கு, பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது இறை குமாரன் என்னப்படும் (லூக்கா 1:35) என்றது. இந்த அற்புதமான செய்தியை அந்தக் கன்னிகை ஈமான் கொண்டபோது, ரூஹுல் குத்தூசும் (பரிசுத்த ஆவியும்) மனித இரத்தமும் சேர்ந்த தனிச்சிறப்பு வாய்ந்த கருவை மரியம் தன்னுடைய கர்ப்பத்தில் உருவாகி இருக்கக் கண்டாள். இவ்வாறுதான் இறைவன் மனிதனானார். இந்த சத்திய்திற்கு முன்பாக நம்முடைய சிந்தனை நின்றுபோய்விடுகிறது. இந்த இரகசியத்தை உயிரியல் தெளிவுபடுத்த முடியாது. மனித அனுபவம் இதைப் புரிந்துகொள்ள முடியாது. ஆகவே ஈஸா அல் மஸீஹ் ஒரே வேளையில் முழுவதும் மனிதனாகவும் முழுவதும் இறைவனாகவும் காணப்பட்டார் என்று அறிக்கையிடுகிறோம்.

 

இந்த அற்புதமான பிறப்பிற்கு மனுவுருவாதலே இருப்பதில் சிறப்பான விளக்கமாக இருக்கிறது. நித்தியமான இறை மைந்தன், காலங்களுக்கு முன்பாகவே பிதாவினிடத்திலிருந்து தோன்றியவர், பாவமில்லாமல் நம்முடைய சரீரத் தன்மையில் பங்கெடுத்தார். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் பாவத்தை நோக்கிய எல்லா உள்ளுணர்வுகளையும் அவரில் மேற்கொண்டார். இவ்வாறு இவ்வுலகில் வாழ்ந்த மனிதர்களிலேயே குற்றமில்லாதவரும், மாசற்றவரும், தூய்மையுள்ளவருமாக வாழ்ந்த ஒரே மனிதன் ஈஸா அல் மஸீஹ் மட்டுமே.

கலக குணமுள்ளவர்களும், இரக்கமற்றவர்களும், தீமையான வர்களும், மரணத்திற்குரியவர்களுமாகிய மனிதர்களுடன் இறைமகன் தன்னை இணைத்துக்கொண்டார். ஆயினும் அவர் நித்தியமானவர், தன்னுடைய இறைத்துவத்தினால் மரிக்கக்கூடாதவர். அவர் உயர்ந்தவராக காணப்பட்டும், தம்முடைய ஆதி மகிமையை விட்டு, நம் நடுவில் இறங்கி வந்து தாழ்மையில் வாழ்ந்தார். அவர் நம்மைப் போன்ற ஒருவராகி நம்முடைய சூழ்நிலைகள் அனைத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ளக் கூடியவரானார். அவர் பாடுபட்டதினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். இவ்வாறு அவர் நமக்காக பரிதபிக்கிறவரானார். தீமை நிறைந்தவர்களாகிய நம்மை அவர் புறக்கணிக்கவில்லை. நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்வதற்காக நம்மிடம் அவர் வந்தார்.

 

ஈஸா அல் மஸீஹ்வின் சரீரம் தவ்ராத் வேதத்தில் இறைவன் மக்களைச் சந்தித்த ஆசரிப்புக்கூடாரத்திற்கு ஒத்ததாயிருக்கிறது. இறைவன் தன்னுடைய எல்லா தன்மைகளுடனும், மஸீஹ்வில், மனித வடிவில் வெளிப்பட்டார். கிரேக்க மொழியின்படி அவர் நம்மத்தியில் கூடாரம் போட்டார் என்றிருக்கிறது. அதாவது அவர் நம்முடன் என்றும் இவ்வுலகில் வாழும்படி ஒரு அரண்மனையைக் கட்டவில்லை; ஆனால் நாடோடிகள் கூடாரத்தில் தற்காலிகமாக வாழ்வதைப்போல அவர் வாழ்ந்தார் என்று பொருள். அதேபோல மஸீஹ்வும் பரலோகத்திற்குப் போவதற்கு முன்பாக நம்மத்தியில் சில காலம் வாழ்ந்தார்.

 

ரஸுல்மார்கள் (அப்போஸ்தலர்கள்) எல்லாருமே ஒன்றாகச் சேர்ந்து அவர்கள் மஸீஹ்வின் மகிமையைக் கண்டதாக சாட்சியிடுகிறார்கள். அவர்களுடைய ஷஹாதா சந்தோஷமும் மகிழ்ச்சியுமானதாக காணப்படுகிறது. அவர்கள் இறைமகன் மனித உடலில் வாழ்ந்ததற்கு கண்கண்ட ஷஹாதாக்கள் (சாட்சிகள்). ஈஸா அல் மஸீஹ்வின்  அன்பையும், பொறுமையையும், தாழ்மையையும், பற்றுறுதியையும், தெய்வீகத்தையும் காணும்படி அவர்களுடைய ஈமான் அவர்களுடைய கண்களைத் திறந்தது. அவருடைய தூய்மையில் அவர்கள் இறைவனையே கண்டார்கள். அவருடைய மகிமை என்ற பதம் பழைய ஏற்பாட்டில் அனைத்து தெய்வீகக் குணாதிசயங்களையும் குறிக்கும் ஒன்றாகும். அப்போஸ்தலனாகிய யோவான் தன்னுடைய சாட்சியில் இந்த அனைத்துக் குணாதிசயங்களையும் தைரியமாக முன்வைத்துள்ளார். அவருடைய மேன்மையையும் அழகையும் மட்டுமல்ல, அவருடைய மறைவான மகத்துவத்தையும் அவர் உணர்ந்துள்ளார்.

 

ரூஹுல் குத்தூசினால் (பரிசுத்த ஆவியானவரால்) தூண்டப்பட்டவராக அவர் இறைவனைப் பிதா என்றும் ஈஸா அல் மஸீஹ்வை குமாரன் என்றும் அழைத்தார். இந்த வார்த்தைகளை நாம் விட்டுவிட்டுச் செல்ல முடியாது. பரிசுத்த ஆவியின் அகத்தூண்டுதல் இறைவனுடைய நாமத்தை மறைத்திருக்கும் திரையை விலக்குகிறது. நித்திய பரிசுத்தரும், வல்லமையுள்ள சிருஷ்டிகருமான பிதாவையும், பரிசுத்தமும் மகிமையும், நிலையான அன்பும் நிறைந்தவருமாகிய குமாரனையும் பற்றி நமக்கு நிச்சயத்தை அது தருகிறது. இறைவன் தன்னுடைய வல்லமையினாலே மக்களை அழித்துப் பழி தீர்க்கும் ஒருவர் அல்ல. அவர் இரக்கமுள்ளவரும், மென்மையானவரும், பொறுமையானவருமாக இருப்பதைப் போலவே அவருடைய மகனும் இருக்கிறார். நாம் பிதாவையும் குமாரனையும் புரிந்துகொள்வதன் மூலமாக இன்ஜீலின் கருப்பொருளைப் புரிந்தகொள்ளுகிறோம். குமாரனைக் காண்கிறவன் பிதாவைக் காண்கிறான். இந்த வெளிப்பாடு மற்ற மதங்களிலுள்ள கடவுளின் சாயலை மாற்றியமைக்கிறது. அன்பின் யுகத்திற்கு நம்முடைய கண்களைத் திறந்துவிடுகிறது.

 

நீங்கள் இறைவனை அறிய வேண்டுமா? அப்படியானால் ஈஸா அல் மஸீஹின் வாழ்க்கைப் படியுங்கள்! ஈஸா அல் மஸீஹ்வில் அவருடைய சீடர்கள் என்னத்தைக் கண்டார்கள்? அவர்கள் இறைவனின் அன்பு கிருபையோடும் சத்தியத்தோடும் ஈஸா அல் மஸீஹ்வில் இணைந்திருந்ததைப் பார்த்தார்கள். இந்த மூன்று அர்த்தங்களையும் சிந்தித்துக்கொண்டு விண்ணப்பியுங்கள், அப்பொழுது இறைவனுடைய மகிமையின் முழுமையும் மஸீஹ்வில் இருப்பதை நீங்கள் உணருவீர்கள். சுகமாக்கும் கிருபையுடன் அவர் வருகிறார், அதற்கு நாம் அருகதையற்றவர்கள். நாம் அனைவருமே குற்றவாளிகள்; நம்மில் யாரும் நல்லவர்கள் இல்லை. நாம் கெட்டவர்களாயிருந்தாலும் அவருடைய வருகை நமக்கு ரஹ்மத்தை பொழிந்தருளுகிறது. அவர் நம்மைத் தன்னுடைய சகோதரர் என்று அழைப்பதற்கு அவர் வெட்கப்படாமல், அவர் நம்மைக் கழுவி, சுத்திகரித்து, புதுப்பித்து, அவருடைய ஆவியினால் நம்மை நிரப்பியிருக்கிறார். இந்த இரட்சிப்பின் செயல்கள் எல்லாம் கிருபையின் மேல் கிருபையல்லவா? அதிலும் மேலாக நாம் ஒரு புதிய உரிமையைப் பெற்றிருக்கிறோம். ஏனெனில் ஈஸா அல் மஸீஹ் நம்மை அவருடைய கிருபையில் ஊன்றி, இறைவனுடைய பிள்ளைகளாகும் உரிமையை நமக்குக் கொடுத்திருக்கிறார். கிருபையின் செய்தி என்பது ஏமாற்று வேலையோ கற்பனையோ அல்ல; அது ஒரு புதிய உரிமை. இறைவன் தம்முடைய இரட்சிப்பில் நம்மைப் பூரணப்படுத்தும் அவருடைய செயலின் அத்தாட்சியே மனுவுருவாதல் ஆகும்.

 

துஆ

 மேய்ப்பர்களும் ஞானிகளும் பெத்தலகேமில் செய்ததுபோல, நாங்களும் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த குழந்தையை தாழவிழுந்து வணங்குகிறோம். இறைவனாகிய நீர் மாம்சத்தில் வந்து எங்களைச் சகோதரர்கள் என்று அழைக்க வெட்கப்படவில்லை. உம்முடைய வெளிச்சம் இருளில் பிரகாசிக்கிறது. என்னுடைய அழுக்கடைந்த இருதயத்தைச் சுத்தம் செய்வாயாக; அப்போது அது நித்தியத்திற்கும் நீர் வாசம்செய்யும் மாட்டுத்தொழுவம் ஆகும். உம்முடைய மகிமை ஒரு தாழ்மையான உடலாக வந்த காரணத்தினால் அனைத்து முஃமீன்களுடனும் சேர்ந்து நான் உம்மை கனப்படுத்துகிறேன். எங்களுடைய பகுதியிலிருக்கும் பரிதாபத்திற்குரிய பலரும் இந்தப் புதிய உரிமையைப் புரிந்துகொண்டு உம்மைப் பெற்றுக்கொள்ள அருள்புரிவாயாக.

 

கேள்வி:

  1. ஈஸா அல் மஸீஹ்வின்  மனுவுருவாதலின் பொருள் என்ன?

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *