குர்பான் இறையன்பின் வெளிப்பாடு

john 3-16 arabic

யோவான் 3:14 – 16

 

14 சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், 15 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல்  நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

 

ஈஸா அல் மஸீஹ் தொடர்ந்து நிக்கோதேமுவுக்குப் போதிக்கும்போது, உண்மையான மனந்திரும்புதலும், மனதில் ஏற்படும் ஒரு மாற்றமும், மனித சமுதாயத்துக்குப் பதிலாளாக மரித்த குர்பானான ஈஸா அல் மஸீஹ்வில் வைக்கும் ஈமானும் இல்லாமல் ஆவிக்குரிய பிறப்பு முழுமை யடையாது என்று கற்பித்தார். இஸ்ரவேலில் நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சியைக் குறிப்பிட்டதன் மூலம் ஈஸா அல் மஸீஹ் இந்தக் காரியங்களை நிக்கோதேமுவுக்கு தெளிவுபடுத்தினார்.

 

சீனாய் வனாந்தரத்தில் பிரயாணம் பண்ணியவர்கள் இறைவனுக்கு எதிராக முறுமுறுத்து, அவருடைய வழிநடத்துதலுக்கு எதிராக கலகம் பண்ணினார்கள் (எண். 21:49). அதன் விளைவாக இறைவன் அவர்களுடைய மூர்க்கத்தனத்தை ஒடுக்குவதற்காக அவர்கள் நடுவில் கொள்ளிவாய் சர்ப்பங்களை அனுப்பினார். அதனால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வபாத்தானார்கள்.

 

அவ்வா (அலை) அவர்களுக்கு சோதனை ஏற்பட்ட காலத்திலிருந்து பாம்புதான் தீமைக்கு அடையாளமாக இருக்கிறது. ஈஸா அல் மஸீஹ் வந்து  முழு மனித சமுதாயத்தினதும் பாவத்தைச் சுமந்தார். பாவமறியாதவர் நமக்காகப் பாவமானார். வனாந்தரத்திலிருந்த வெண்கலச் சர்ப்பத்தைப் போல ஈஸா அல் மஸீஹும் விஷமற்றவராக, அதாவது பாவ மற்றவராக நம்முடைய பாவத்தைச் சுமந்தார்.

இறை மைந்தன் துன்யாவுக்கு வந்தபோது பிரகாசமான தோற்றத்தில் காணப்படவில்லை. மனுமகனாக தாழ்மையின் கோலத்தில் காயங்களையும் வேதனைகளையும் சுமந்தவராக, ஷரீஆவின் சாபத்தைச் சுமந்து தீர்த்தார். மனித உருவில் அவர் நமக்காக மரிக்கக்கூடிய வராயிருந்தார். மனித குமாரன் என்பது அவரை வேறுபிரித்துக் காட்டும் அடையாளமாகும். எவ்வாறு உயர்த்தப்பட்ட வெண் கலச் சர்ப்பம் இறைகோபம் நீக்கப்பட்டதற்கு அடையாளமா யிருந்ததோ, அப்படியே சிலுவையில் அறையப்பட்ட ஈஸா அல் மஸீஹும் இறைகோபம் நீங்கியதற்கு அடையாளமாயிருக்கிறார். தன்னுடைய மரணத்தினால் நம்மை விடுவிக்கும்படி நம்முடைய பாவம் அனைத்தும் அவர் மீது வைக்கப்பட்டது.

 

வனாந்தரத்தில் யாரெல்லாம் உயர்த்தப்பட்ட சர்ப்பத்தை, இறைவனுடைய வாக்குறுதியின் மேல் விசுவாசமுள்ளவர்களாக நோக்கிப் பார்த்தார்களோ, அவர்களுடைய பாம்புக்கடி குணமானது. இந்த கிருபையின் அடையாளத்தின்மீது கொள்ளும் பற்றுறுதி முஃமீனுக்கு வாழ்வைக் கொடுக்கிறது. யாரெல்லாம் சிலுவையைப் பார்த்து சிலுவையில் அறையப்பட்டவரோடு சேர்ந்துகொள்கிறார்களோ அவர்கள் முடிவற்ற வாழ்வைப் பெற்றுக்கொள்கிறார்கள். நான் மஸீஹோடுகூட சிலுவையில் அறையப்பட்டேன். ஆகிலும் பிழைத்திருக்கிறேன். இனி நானல்ல, கிறிஸ்துவே என்னில் பிழைத்திருக்கிறார் என்று பவுல் கூறுகிறார். அவருடைய மரணம் என்னுடைய மரணம், அவ்வாறே அவருடைய வாழ்வும் என்னுடைய வாழ்வு. யாரெல்லாம் ஈஸா அல் மஸீஹ்வின் சிலுவை குர்பானை ஈமான் கொள்கிறார்களோ, அவர்கள் நீதிமான்களாக்கப்பட்டு என்றென்றைக்கும் அவரோடு வாழ்வார்கள். இந்த இணைப்பு நம்மை அவருடைய உயிர்த்தெழுதலோடும் ஐக்கியப்படுத்துகிறது.

 

 

நியாயம் தீர்க்கப்பட்டவர்களாகிய நாம் மீட்கப்பட வேண்டுமானால் ஈஸா அல் மஸீஹ்வை நோக்கிப் பார்க்க வேண்டும். சிலுவையில் குர்பானான மஸீஹ்வின் வழியாக (தரீகதுல் மஸீஹ்) அல்லாமல் வேறு எவ்வழியிலும் மனிதர்கள் இறைவனிடம் செல்ல முடியாது. அதனால்தான் ஷைத்தான் இரவும் பகலும் இரட்சிப்பின் இந்த இரண்டு கொள்கைகளையும் கொடூரமாகத் தாக்குகிறான்.

ஈஸா அல் மஸீஹ்வின் தெய்வீக குமாரத்துவத்திலும் சிலுவை குர்பானிலும் துன்யாவின் மீட்பு தங்கியிருக்கிறது.

 

இறைவன் அன்பானவர். அவருடைய இரக்கம் எல்லையற்ற சமுத்திரத்தைப் போன்றது. அவரைவிட்டு விலகிச் செல்லும் நம்முடைய உலகத்தை கைவிட்டுவிடாமல் அவருடைய அன்பினால் தொடர்ந்து நேசிக்கிறார். பாவமுள்ள கலகக்காரர்களை அவர் புறக்கணிக்காமல் இரக்கம் காட்டுகிறார். நம்முடைய இரட்சிப்புக்குத் தேவையான நீதியின் கோரிக்கைகள் எல்லாவற்றையும் அவருடைய குமாரனின் மரணம் நிறை வேற்றியது. குமாரனில்லாமல் இரட்சிப்பில்லை.

 

அன்பு சகோதரனே, உம்முடைய நண்பர் ஒருவருக்காக ஆயிரம் ரூபாயை நீர் இழப்பீரா? அவனுக்காக சிறைக்குச் செல்ல ஆயத்தமா? அல்லது அவனுக்காக உயிரை கொடுக்க ஆயத்தமா? அவர் உம் நண்பர் என்றபடியால் ஒரு வேளை இவைகளை நீர் செய்யலாம். ஆனால் அவன் உமது எதிரியாக இருந்தால் ஒருபோதும் இந்தக் காரியங்களைச் செய்ய மாட்டீர். ஆனால் ரப்புல் ஆலமீன் குற்றவாளிகளாகிய நம்மை இரட்சிப்பதற்காக தன்னுடைய மைந்தனையே குர்பானாகக் கொடுத்தது, அவருடைய அன்பின் மேன்மையைக் காண்பிக்கிறது.

 

ஈஸா அல் மஸீஹ் சிலுவையில் இந்த துன்யாவுக்கான மீட்பை நிறைவேற்றி முடித்தார். எல்லா வகையான மனிதர்களும், படித்த வர்களும் படிக்காதவர்களும், தாழ்மையானவர்களும் அகம்பாவ முள்ளவர்களும், பணக்காரர்களும் ஏழைகளும், நல்லவர்களும் கெட்டவர்களும் யாருமே தங்களில் நீதியுள்ளவர்கள் அல்ல. ஈஸா அல் மஸீஹ் இவ்வுலகத்தைப் பிதாவோடு ஒப்புரவாக்கியிருக்கிறார்.

 

சிலுவையில் குர்பானானவரை ஈமான் கொள்பவர்களைத் தவிர  வேறு எந்த மனிதருக்கும் இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியாது. இரட்சகருடன் உங்களுக்கிருக்கும் உறவுதான் உங்களுடைய மீட்பை முடிவுசெய்கிறது. ஈமான் கொள்ளாமல் இருந்தால்  நீங்கள் தொடர்ந்து இறைவனுடைய கோபத்திற்கு ஆளானவர்களாகவே இருப்பீர்கள். இறைவனுடைய பரிசுத்தத்தின் வெளிச்சத்தில் உங்களுடைய அமல்கள் அனைத்தும் நேர்மையற்றவைகளும் அழுக்கானவைகளுமாகக் காணப்படுகிறது. ஷரீஆவினால்  மீட்பு என்று நம்பிக்கொண்டிருந்த இமாமாகிய நிக்கோதேமு இந்தக் காரியங்களைக் கேட்டபோது ஆச்சரியப்பட்டார்.

 

அவமானச் சின்னமாகிய மரத்தில் உயர்த்தப்பட்ட குமாரனை ஈமான் கொண்டு, சிலுவையின் இரட்சிப்பை ஏற்றுக்கொள்பவர்கள் வாழ்வைப் பெற்றுக்கொள்வதோடு இறைவனுக்கும் தங்களுக்கும் இடையில் எந்தத் தடையும் இல்லை என்பதை அறிந்து கொள்வார்கள். நீங்கள் உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டதற்காக ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்கு நன்றி சொன்னதுண்டா? உங்கள் வாழ்வை அவருக்கு நீங்கள் ஒப்படைத்திருக்கிறீர்களா?

 

மஸீஹ்வை ஈமான் கொள்கிறவர்கள் வாழ்கிறார்கள். மஸீஹ்வில் நிலைத்திருப்பவர்கள் ஒருபோதும் மரிப்பதில்லை. மஸீஹ்வை ஈமான் கொள்பவர்கள் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிறார்கள். ரூஹுல் குத்தூஸ் நமக்குள் வாழ்வதை ஈமான் உறுதிசெய்கிறது. நீங்கள் 14 முதல் 16 வரையான வசனங்களின் ஆழத்தை அறிந்துகொள்வீர்களானால், இந்த ஒரு பகுதி யிலிருந்தே நற்செய்தியின் சாராம்சத்தைக் கண்டுகொள்வீர்கள்.

 

துஆ :

ரப்புல் ஆலமீனே, உம்முடைய அளவற்ற அன்புக்காக உம்மை நாங்கள் சுஜுது செய்கிறோம். எங்களுடைய இடத்தில் மரிப்பதற்காக நீர் உம்முடைய ஒரே மைந்தனை கொடுத்தீர். அவர் எங்களுடைய பாவங்களையும் அவற்றுக்கான தண்டனையையும் சுமந்து எங்களை உம்முடைய கோபத்திலிருந்து விடுவித்தார். நன்றியோடும், ஸ்தோத்திரத்தோடும், நன்றி உணர்வோடும் சிலுவையை நோக்கிப் பார்க்கிறோம். நீர் எங்களுடைய பாவங்களை மன்னித்து இவ்வுலகத்தை உம்மோடு ஒப்புரவாக்கினீர். உம்முடைய வார்த்தையாகிய ஈஸா அல் மஸீஹ்வின் மூலமாக மற்றவர்களும் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ளும்படி நாங்கள் இந்த செய்தியை அவர்களுக்கும் சொல்ல எங்களுக்கு உதவிசெய்வாயாக!  ஆமீன்…
கேள்வி : வனாந்தரத்திலிருந்த வெண்கல சர்ப்பத்திற்கும் ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்கும் இடையிலான ஒற்றுமையென்ன?

 

One Response to குர்பான் இறையன்பின் வெளிப்பாடு

  1. Gatsy says:

    Thanks for another informative blog. Where else could I get that type of information written in such an ideal way? I’ve a project that I am just now working on, and I’ve been on the look out for such inronmatiof.

Leave a Reply to Gatsy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *