ரூஹுல் குத்தூசினால் நீங்கள் நிரம்பியிருக்கிறீர்களா?

யோவான் 1:31-34 


31 நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான். 32 பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன். 33 நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். 34 அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்.

 

நபி யஹ்யாவுடைய முப்பதாவது வயதில் இறைவன் அவரை அழைத்து, மஸீஹ்வுக்கு வழியை ஆயத்தப்படுத்தவும் மக்களுக்கு அவரைத் தெரியப்படுத்தவும் அனுப்பினார். இது அவருடைய ஞானஸ்நான சமயத்தில் நடைபெற்றது, அப்போது மனந்திரும்பிய மக்கள் மஸீஹ்வின் வருகைக்கு ஆயத்தமாக அவரை வரவேற்கத் தயாராக இருந்தனர். இதுவரை யாரும் கண்டிராத காட்சியை யஹ்யா பார்ப்பார் என்று இறைவன் அவருடன் பேசி வாக்குப் பண்ணியிருந்தார். ரூஹஹுல் குத்தூஸ் மஸீஹ்வின் மீது இறங்கும் காட்சியே அது. பரிசுத்த ஆவியானவர் (ரூஹஹுல் குத்தூஸ்) ஈஸா அல் மஸீஹ்வின் மேல் தங்கினார் என்பதுதான் கவனிக்கத்தக்கது. பழைய ஏற்பாட்டு நபிமார்கள் ஒரு குறிப்பிட்ட காலம் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டுப் பேசினார்கள், ஆனால் ஈஸா அல் மஸீஹ்வோ நிரந்தரமாக ரூஹுல் குத்தூசினால் நிறைந்திருந்தார். அடிக்கடிவரும் வசந்த காலம் போல ஆவியானவர் விசுவாசிகளை தெய்வீக வல்லமையினால் நிரப்புவார்.

 

இரண்டு வாலிபர்களும் யோர்தானுடைய நதிக்கரையில் அருகருகே நின்றுகொண்டிருந்தார்கள்; வானம் அமைதியாகத் திறந்துகொண்டது; திடீரென பரிசுத்த ஆவியானவர் (ரூஹுல் குத்தூஸ்) புறாவடிவில் வருவதை யோவான் கண்டார். நீல வானத்தில் வெள்ளைப் புறா சமாதானத்திற்கும் தாழ்மைக்கும் அடையாளமாக இறங்கி வந்தது.

 

இறங்கிவந்த பரிசுத்த ஆவியானவர், யஹ்யா நபியின் மீதோ, மனந்திரும்பிய பாவிகள் மீதோ வந்து அமரவில்லை. நேரடியாக ஈஸா அல் மஸீஹ்வின் மீது வந்தமர்ந்தது. ஈஸா அல் மஸீஹ் எல்லா ரஸுல்மார்களையும்விட, அனைத்துப் படைப்புகளையும்விட பெரியவர் என்பதற்கு இது ஒரு நேரிடையான அடையாளம். அப்போது தனக்கு முன்பாக நிற்பவர் எதிர்பார்க்கப்பட்ட நித்தியமான இறைவன் என்பதை நபி யஹ்யா அறிந்துகொண்டார்.

 

மரியம் யஹ்யா நபியின் தாயாகிய எலிசபெத்தைச் சந்தித்து வாழ்த்துச் சொல்லியபோது, அவளுடைய வயிற்றிலிருந்து மகிழ்ச்சியில் துள்ளிய யஹ்யா இப்போதும் துதியினாலும் மகிழ்ச்சியினாலும் நிரம்பியிருப்பார் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. (இன்ஜீல் – லூக்கா 1:36-45).

மஸீஹ்வே ரூஹைக் கொடுப்பவர் என்று நபி யஹ்யா அறிந்துகொண்டார். ஆனால் அவர் அந்த காட்சியை மறைக்கவில்லை. வெளிப்படையாக அறிவித்தார்: ரப்புல் ஆலமீன் வந்திருக்கிறார்; அவர் நம் நடுவில் இருக்கிறார்; அவர் நம்மை நியாயம் தீர்க்க வரவில்லை. அன்பையும் நல்லெண்ணத்தையும் காண்பிக்க வந்திருக்கிறார். அவர் சாதாரண மனிதன் அல்ல, ரூஹுர“ குத்தூசினால் நிரம்பிய இறைமைந்தன். யாரெல்லாம் ஈஸா அல் மஸீஹ் இறைவனிடத்திலிருந்து வரும் ரூஹ் என்று அறிக்கையிடுகிறார்களோ அவர்கள் அவர் இறைமைந்தன் என்றும் அதேவேளையில் அறிக்கையிடுகிறார்கள். இவ்வாறு மஸீஹ்வின் வருகையின் நோக்கத்தை யஹ்யா நபி  தெளிவுபடுத்தினார்: மனந்திரும்பு கிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பதற்காகவே அவர் வந்திருக்கிறார். இறைவன் ரூஹாகயிருக்கிறார், அவருடைய மைந்தனாகிய மஸீஹ் மாம்சத்தில் வந்த இறையாவியானவர். இறைவனுடைய அன்பு என்னும் தெய்வீக மெய்மையினால் அவரைப் பின்பற்றுபவர்களை நிரப்புவது அவருடைய திருச்சித்தம்.

 

அன்புள்ள சகோதரனே, ரூஹுல் குத்தூசினால் நீங்கள் நிரம்பியிருக்கிறீர்களா? மஸீஹ்வின் வல்லமையை உங்கள் வாழ்வில் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? மஸீஹ்வின் சிலுவை குர்பானியை நீங்கள் ஈமான் கொள்வதன் மூலமாக, உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இந்த தெய்வீக குணாதிசயம் உங்களுடையதாகும். யாரெல்லாம் இந்தப் பாவ மன்னிப்பை தேவ ஆட்டுக்குட்டியிடம் பெற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிறார்கள். எல்லா முஃமீன்களுக்கும் இந்த ஆவிக்குரிய ஆசீர்வாதத்தைக் கொடுக்க இறைமகன் ஆயத்தமாயிருக்கிறார்.

துஆ

 பரிசுத்த இறைமைந்தனே நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம், துதிக்கிறோம். எங்களுக்காக நீர் உம்மைத் தாழ்த்தி எங்களுடைய பாவங்களைச் சுமந்தீர். சிலுவையில் நீர் சிந்திய இரத்தத்தின் மூலமாக எங்களுடைய பாவங்களை நீர் மன்னித்தபடியால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் மீதும் உம்மை நேசிக்கிறவர்கள் மீதும் நீர் பொழிந்தருளும் பரிசுத்த ஆவியானவருடைய வல்லமைக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். தங்கள் அக்கிரமத்திலும் பாவத்திலும் உறங்கிக்கொண்டிருப்பவர்களை எழப்பும். அவர்களை உம்முடைய மென்மையான சத்தியத்தினால் நிரப்பும்.

 

கேள்வி:

  1. பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பவராக ஈஸா அல் மஸீஹ் ஏன் வந்தார்?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *