இறை குமாரனும் மனுஷ குமாரனும்

(இன்ஜீல்) யோவான் 1:47-51 


47 இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். 48 அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். 49 அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். 50 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். 51 பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

 

ஈஸா அல் மஸீஹ் தன்னுடைய உள்ளான காரியங்களை அறிந்திருக்கிறார் என்பதைக் கண்ட நாத்தான்வேல் திகைப்புற்றான். முன்னைய வேதங்களின்படி நாத்தான்வேல் ஒரு முஃமினாக காணப்பட்டான். ஏனெனில் அவன் தன்னுடைய பாவங்களை ஸ்நானகனிடம் அறிக்கை செய்திருந்தான், இறைவனுடைய இராஜ்யம் வருவதற்கு முழுமனதுடன் காத்திருந்தான். இது அவனுடைய சுய நீதியான ஒரு செயலல்ல, தங்கள் பாவங்களினிமித்தம் மனமுடைந்து, இறைவன் தங்களுக்கு மஸீஹ் ஆகிய இரட்சகரை அனுப்ப வேண்டும் என்று கூப்பிடும் மக்களுடைய மனநிலை. ஈஸா அல் மஸீஹ் இந்த விண்ணப்பத்தைக் கேட்டார், ஒரு மர நிழலில் முழங்கால்படியிட்டு துஆ செய்யும் நபரையும் அவர் பார்த்தார். இவ்வாறு மனிதருக்குள்ளிருக்கும் காரியங்களை அறியும் சக்தி இறைவனுக்குரியது. ஈஸா அல் மஸீஹ் அவனைப் புறக்கணியாமல் நீதிமானாக்கினார். மஸீஹ்வின் வருகைக்காக எதிர்பார்த்திருக்கும் முன்தின வேதங்களின் முஃமீன்களுக்கு அவன் மாதிரியானவன் என்றும் குறிப்பிட்டார்.

 

ஈஸா அல் மஸீஹ்வின் பாராட்டு அவனுடைய சந்தேகங்களை நீக்கிவிட்டது. அவன் ஈஸா அல் மஸீஹ்வுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து, இறைவேதத்தில் அவருக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள பட்டங்களாகிய இறைமகன், இஸ்ரவேலின் இராஜா போன்ற பட்டங்களைச் சொல்லி அவரை மகிமைப்படுத்தினான். இமாம்களும் யூத முப்திகளும் இறைவனுக்கு மகன் இல்லை என்று மறுதலிப்பதால், நாத்தான்வேலின் இந்தப் பதங்கள் அவனுக்கு மரண தண்டனையைக்கூட கொடுத்திருக்கும். அப்படிப்பட்ட கூற்றுக்கள் ஷிர்க்காக (தேவதூஷணமாக)க் கருதப்படும். ஒரு மனிதன் தன்னை இஸ்ரவேலின் இராஜா என்று சொன்னால் அவனை ஏரோது துன்புறத்துவான், அதேபோல ரோம அதிகாரங்களும் சிறைப்பிடிப்பார்கள். இவ்வாறு நபிமார்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான வாக்குத்தத்தங்களின் பொருளை இந்த உண்மையான முஃமின் எவ்வளவு தெளிவாக அறிந்திருந்தான் என்பது வெளிப்படுகிறது. அவன் மனிதருக்குப் பயப்படுவதைக் காட்டிலும் இறைவனுக்குப் பயந்தவனாக பிதா கொடுத்த பட்டங்களைச் சொல்லி மஸீஹ்வை மகிமைப்படுத்தினான். அதற்காக அவன் எந்த விலையையும் கொடுக்க ஆயத்தமாயிருந்தான்.

 

இதற்கு முன்னிருந்த சீஷர்களில் எவரும் நாத்தான்வேல் கூறிய நாமங்களைக் கூறுவில்லை. ஈஸா அல் மஸீஹ் இந்தப் பட்டங்கள் எதையும் மறுதலிக்காமல், வானங்கள் திறக்கப்படுவதன் மூலமாக அவனுடைய அறிவை இன்னும் அதிகப்படுத்தினார். இந்த சம்பவங்கள் நடைபெறும்போதே காணப்படாத மலக்குகள், மஸீஹ்வின் அற்புதங்களை பிதாவிடம் சொல்லுவதும், பிறகு குமாரனிடத்தில் இறங்கி வருவதுமாக, கைநிறைய ஆசீர்வாதங்களுடன் போய்வந்துகொண்டிருந்தனர். இவ்வாறு யாக்கோபின் தரிசனம் நிறைவேறியது. ஏனெனில் ஈஸா அல் மஸீஹ்வில்தான் பரக்கத்துகள் அனைத்தும் நிறைவடைகிறது. பவுல் எழுதியதைப் போல, நம்முடைய ரப்புவாகிய ஈஸா அல் மஸீஹ்வின் பிதாவாகிய இறைவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தாவதாக. அவர் உன்னதங்களிலே சகல ஆசீர்வாதங்களினாலும் நம்மை அசீர்வதித்திருக்கிறார். ஈஸா அல் மஸீஹ்வின் பிறப்பினி மித்தமாகவும் அவருடைய ஞானஸ்நானத்தின் நிமித்தமாகவும் சுவர்க்கம் திறந்திருந்தது. அதற்கு முன்பாக சுவர்க்கம் இறைவனுடைய கோபத்தின் காரணமாக மூடப்பட்டிருந்து, மலக்குகள் உருவின பட்டயத்துடன் அதன் வாசலில் காவல் இருந்தார்கள். இறைவனிடம் செல்லும் வாசல் இப்போது மஸீஹ்வுக்குள் திறக்கப்பட்டுள்ளது.

 

இங்கே முதல் தடவையாக ஈஸா அல் மஸீஹ் திரும்பத்திரும்பக் கூறிய சொற்றொடரை அவதானிக்கலாம். மெய்யாகவே, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். இந்தக் கிருபையின் காலத்தின் மெய்மை மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. ஆனாலும் இதுவே நம்முடைய ஈமானுக்குத்  தேவையான தெய்வீக அடிப்படை. எப்பொழுதெல்லாம் ஈஸா அல் மஸீஹ் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துகிறாரோ அப்பொழுது நாம் கவனமாக கவனிக்க வேண்டும். ஏனெனில் அதன்பிறகு மனித சிந்தைக்கு அப்பாற்பட்ட ஒரு ஆவிக்குரிய வெளிப்பாட்டை ஈஸா அல் மஸீஹ் கூறுவார்.

 

இந்த அறிவித்தலுக்குப் பிறகு ஈஸா அல் மஸீஹ் அவருக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் வரப்போகும் உபத்திரவங்களைக் குறித்த எச்சரிக்கையாக நாத்தான்வேலின் சாட்சியைச் சரிசெய்கிறார். ஈஸா அல் மஸீஹ் தன்னை வாக்குப்பண்ணப்பட்ட இராஜா என்றும் இறைவனுடைய மகன் என்றும் கூறாமல் மனித குமாரன் என்று அழைத்தார். இந்தப் பட்டப்பெயரைத்தான் ஈஸா அல் மஸீஹ் பொதுவாக தனக்குப் பயன்படுத்தினார். அவருடைய மனுவுருவாதல் ஒப்பற்றது; அவர் நம்மைப்போல மாறினார் என்பது மிகப்பெரிய அற்புதம், தேவகுமாரன் மனித குமாரனானார். தேவஆட்டுக்குட்டியாக நமக்காக மரிப்பதற்காக அப்படியானார்.

 

அதேபோல மனித குமாரன் என்ற பட்டப்பெயர் தானியேலின் புத்தகத்திலுள்ள ஒரு இரகசியத்தைக் குறிக்கிறது. இறைவன் நியாயம் தீர்க்கும் பொறுப்பை மனித குமாரனுக்குக் கொடுத்திருக்கிறார். இயேசு சாதாரணமாக இராஜாவோ குமாரனோ மட்டுமல்ல, உலகங்களை நியாயம்தீர்க்கும்படி மனித உருவில் வந்த இறைவன் என்பதை நாத்தான்வேல் உணர்ந்துகொண்டான். இவ்வாறு துக்கம் நிறைந்த முஃமினை விசுவாசத்தின் உயர்ந்த நிலைக்கு ஈஸா அல் மஸீஹ் அழைத்துச் சென்றார். ஈஸா அல் மஸீஹ் கிராமப்புறத்திலிருந்து வந்த வாலிபனாக இருப்பதால், அப்படிப்பட்ட ஈமான் இலகுவான ஒன்றல்ல. வானங்கள் திறக்கப்படுவதன் மூலமாக அவரில் மறைந்திருந்த மகிமையை விசுவாசத்தினால் சீஷர்கள் கண்டார்கள்.

 

துஆ:

 இறை குமாரனும் சர்வலோக நியாயாதிபதியுமாகிய உம்மை நாங்கள் ஆராதிக்கிறோம். நாங்கள் இறைவனுடைய கோபத்தைத் தவிர எதையும் பெற்றுக்கொள்ள பாத்திரவான்கள் அல்ல. ஆனால் உம்முடைய கிருபையினால் உண்டாகும் பாவமன்னிப்புக்காகவும் எங்கள் மேல் நீர் இரக்கம் காட்ட வேண்டும் என்றும் நாங்கள் இரஞ்சுகிறோம். உம்மைத் தேடுகிற யாவரும் உம்மைக் கண்டு, அறிந்து, நேசித்து, அன்புகூர்ந்து, உம்மைப் பற்றிக்கொண்டு, அறிவிலும் நம்பிக்கையிலும் வளரத்தக்கதாக உம்முடைய ஆசீர்வாதங்களைப் பொழிந்தருளும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *